சஞ்சீவ படுகொலை விவகாரம்! ஜனாதிபதி அநுர அளித்துள்ள உத்தரவாதம்
மக்களைப் பாதுகாப்பதற்காக இருக்கும் உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்களால் பாதாள உலகம் பரவியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரியவந்துள்ளார்.
எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் இன்று(20.02.2025) நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
நீதிமன்ற வளாகங்களின் பாதுகாப்பு
இதன்போது, நாட்டின் நீதிமன்ற வளாகங்களின் பாதுகாப்பு குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, நீதிமன்ற வளாகங்களின் பாதுகாப்பு குறித்து ஒரு முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் சட்டத்தரணிகள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஆராய்ந்து நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற வளாகங்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களைக் கொண்ட நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவது தொடர்பான தகவல்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநுரகுமார திசாநாயக்கவிடம் முன்வைத்துள்ளனர்.
வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதும் முப்படையினரால் பயன்படுத்தப்படும் காணிகள் குறித்து மறு தணிக்கை அல்லது மதிப்பீடு நடத்தப்பட்டு, காணிகளை விடுவிப்பது தொடர்பான எதிர்கால முடிவுகள் எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதன்போது சுற்றுலாத் துறையில் அதிக உற்பத்தித் திறன் கொண்ட முதலீடுகளைச் செய்வதற்கு, சுற்றுலா விடுதிகள் உட்பட இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள வணிகங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் முன்மொழியப்பட்டுள்ளனர்.
பொருளாதார நன்மை
இதன்படி, எதிர்காலத்தில் இது தொடர்பில் ஆய்வு நடத்தி, பொருளாதார நன்மைகளுக்காக அவற்றைப் பயன்படுத்துவது குறித்து முடிவு செய்ய முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் நிறுவப்பட்ட சில வழிபாட்டுத் தலங்களிலிருந்து இன மற்றும் மதப் பிரிவுகள் எழுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளனர்.
இதனை கேட்டறிந்த ஜனாதிபதி, அரசியலில் இருந்து மத மற்றும் இன வெறுப்பு முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் அந்தப் பகுதி மக்களின் உண்மையான நலன்களின் அடிப்படையில் தீர்க்க முடியும் என்றும், குறுகிய அரசியல் லாபங்களைத் தேடும் சில குழுக்கள் இதுபோன்ற சூழ்நிலைகளை அரசியல் பிரச்சினைகளாக மாற்றுகின்றன என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
எனவே, குறுகிய அரசியல் லாபங்களுக்காக இனவாதம் மற்றும் மத வெறியைத் தூண்டுவதற்கு யாருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |