வைத்தியசாலைகளுக்கு போதியளவு தடுப்பூசி வழங்கப்படவில்லையென தகவல்
வைத்தியசாலைகளுக்கு போதியளவு தடுப்பூசிகள் வழங்கப்படுவதில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருத்துவ சுகாதார அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் போதுமான அளவில் வழங்கப்படவில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுக் குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலபகே தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசிகள் அதிகளவில் இராணுவத்திற்கு வழங்கப்படுவதாகவும்,வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் கோவிட் தடுப்பூசிகளுக்கு பாரியளவில் தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி விநியோகம் செய்யும் பொறுப்பு சுகாதார அமைச்சு அல்லது தொற்று நோய் தடுப்பு பிரிவு அகியனவற்றில் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றி முடியும் வரையில் மரணங்களை கட்டுப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
60 வயதுக்கும் மேற்பட்டவர்கள், நாட்பட்ட நோயுடையவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு முதலில் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென தமது சங்கம் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தும் என கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
30 முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு திட்டமிட்ட அடிப்படையில் கிரமமாக தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென டொக்டர் பிரசாத் கொலபகே தெரிவித்துள்ளார்.



