நாட்டை உலுக்கிய பெரும் சோகம் - முதியோர் இல்லத்தில் தீயில் கருகி பலியான 13 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்
ஹொரணை - அங்குருவாத்தோட பகுதியில் உள்ள 'மவ்பிய செவண' முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த (3) திகதி மாலை 5 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்க நிறுவனத்தில் பதிவு செய்யப்படாத இல்லம்
குறித்த இல்லத்தில் மனநலக் குறைபாடுகள் கொண்ட பல்வேறு வயதுடைய பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 72 பேர் இருந்தமை இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பராமரிப்பு பணிகளுக்காக நிர்வாகத்தரப்பில் ஐந்து பேர் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இருப்பினும், இந்த இல்லம், எந்தவொரு அரசாங்க நிறுவனத்திலும் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
குறித்த இல்லம் எந்தவொரு நிறுவனத்திலும் பதிவு செய்யாமலும், முறையான அரசாங்க வழிகாட்டுதல்களை மீறியும் செயற்பட்டுள்ள நிலையில், இல்லம் செயல்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அங்குருவாத்தோட பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிஹிந்துனி தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் தற்போது இருவரை காணவில்லை என்றும், வீட்டில் இருந்த 4 பெண்கள் மற்றும் 4 ஆண்களைக் கதிர்காமம் முதியோர் நலப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய மனநலக்குறைபாடுகள் உள்ளவர்களை பாதுகாவலர்கள் வந்து அழைத்துச்செல்லவும், மீதமுள்ளவர்களை மாற்றுத்திறனாளிகளுக்கான அரசாங்கப்பதிவு பெற்ற தடுப்புக்காவல் மையங்களில் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இல்லத்தின் சேர்க்கை கட்டணம்
குறித்த இல்லத்தின் சேர்க்கை கட்டணம் 75,000 ரூபாய் என்றும், ஒவ்வொரு மாதமும் 25 ஆம் திகதி அவர்களின் கணக்கில் 35,000 ரூபாய் செலுத்தப்படுவதாகவும் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உறவினர்களை பார்க்க வருவதாக இருந்தால் முன்கூட்டியே அறிவித்து அனுமதி பெற்றுக்கொண்டே வர வேண்டும். அப்போது நன்றாகக் குளிப்பாட்டித் தூய்மையாக வைத்திருப்பார்கள். இல்லையெனில், மற்றைய நாட்களில் எந்தவொரு தூய்மையும் இருக்காது.சங்கிலியால் பிணைத்துக் கட்டி வைத்திருப்பார்கள்.
இவர்கள் இயலாதவர்களை ஒரு பக்கமாகப் போட்டுவிட்டு, ஓரளவிற்குப் பேசவும் நடக்கவும் கூடியவர்களை வெளியே அழைத்து வந்து காணொளி எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுப்பணம் சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த நேரத்தில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அங்கு இல்லை என்றும், சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள இரண்டு மாடி வீட்டில் அவர்கள் வசதியாக தங்குவதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
மேலும், மனநலக் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு நிறுவனத்தை நடத்துவதற்குத் தேவையான மருத்துவர், செவிலியர், ஆம்புலன்ஸ் போன்ற எந்த வசதிகளும் இந்த நிறுவனத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.