முஸ்லிம் பெயர்களில் சமூக வலைத்தளங்களில் இனவாதக் கருத்துக்கள்! ஹிஸ்புல்லாஹ் எம்.பி. சுட்டிக்காட்டு
அண்மைக்காலமாக முஸ்லிம் பெயர்களில் சமூக வலைத்தளங்களில் இனவாதக் கருத்துக்கள் தீவிரமாக வெளியிடப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய (09) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அண்மைக்காலமாக நாட்டின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் சீர்குலைக்கும் வகையில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தித் திட்டமிட்ட சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்குக்கொண்டுவர விரும்புகிறேன்.
இனவாத, மதவாதக் கருத்துக்கள்
குறிப்பாக, சில இனவாத சக்திகளால் முஸ்லிம்களின் பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்திப் போலியான சமூக ஊடகக் கணக்குகள் உருவாக்கப்பட்டு அவற்றின் ஊடாக ஏனைய சமூகங்கள் மற்றும் மதங்களுக்கு எதிரான இனவாத, மதவாதக் கருத்துக்கள் வெளியிடப்படுவதாக அவதானிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், வெறுப்பையும் பதற்றத்தையும் தூண்டும் காணொளிகளும் பரப்பப்படுகின்றன.
இதனால், உண்மையான தகவல்களுக்கும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் போலியான பிரசாரங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அறியாத பொதுமக்கள், குறிப்பாக ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம் சமூகம் பற்றித் தவறான புரிதலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இது நாட்டின் இன நல்லிணக்கம், சமூக அமைதி மற்றும் தேசிய பாதுகாப்பையும் பாதிக்கக்கூடிய பாரதூரமான விடயமாகும்.

இது வெறுமனே சமூக ஊடகப் பிரச்சினை அல்ல; நாட்டின் இன நல்லிணக்கம், சமூக அமைதி மற்றும் தேசிய பாதுகாப்பையும் பாதிக்கக்கூடிய பாரதூரமான விடயமாகும். எனவே, முஸ்லிம்களின் பெயரில் போலியான கணக்குகளை உருவாக்கி, பிற சமூகங்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் பதிவுகளை வெளியிடுவதன் பின்னணியில் திட்டமிட்ட அமைப்புகளோ அல்லது குழுக்களோ செயற்படுகின்றனவா என்பதைக் கண்டறிய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதா?
நிதி அல்லது வேறு ஏதேனும் ஆதரவு
அவ்வாறான செயற்பாடுகளுக்கு நிதி அல்லது வேறு ஏதேனும் ஆதரவு வழங்கப்படுகிறதா என்பதும் ஆராயப்பட்டுள்ளதா? மேலும் இவ்வாறான போலியான கணக்குகள் மற்றும் வெறுப்புப் பிரசாரங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தடுக்கவும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்இ இன அல்லது மத வெறுப்பைத் தூண்டும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராகச் சட்டம் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
எனவே, சமூக நல்லிணக்கத்தையும் நாட்டின் அமைதியையும் பாதுகாப்பதற்காக, இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமா என்பதை அறிய விரும்புகிறேன் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.