திடீரென தீப்பற்றி எரிந்த ஹிட்லரின் மலைப்பகுதி ஓய்வு விடுதி - ஒருவர் கைது
ஜெர்மனி - பவேரியா மாநிலத்தில், “ஈகிள்ஸ் நெஸ்ட்” அல்லது “கெல்ஸ்டீன்ஹவுஸ்” என்று அழைக்கப்படும் அடோல்ஃப் ஹிட்லரின் மலைப்பகுதி ஓய்வு விடுதியில் தீ விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(23.10.2026) இடம்பெற்றுள்ளது.
திடீரென பரவிய தீ
இரவு 9:15 மணியளவில் இந்தக் கட்டிடத்திலிருந்து தீப்பரவல் எச்சரிக்கை மணி ஒலித்ததையடுத்து, சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இருப்பினும், மலைப்பகுதியின் கடினமான நிலப்பரப்பு மற்றும் கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் அமைந்திருந்ததால் தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பாக பொலிஸார் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்குச் செல்லும் வழியில் எதிர் வந்த மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஹிட்லரால் கட்டப்பட்ட கட்டிடம்
இரண்டாம் உலகப் போரின் போது நாஸி சர்வாதிகாரி ஹிட்லரால் பயன்படுத்தப்பட்ட இந்த வரலாற்று கட்டிடம் 1938- இல் கட்டி முடிக்கப்பட்டது. உலகப் போரில் சேதமடையாமல் தப்பிய இந்தக் கட்டிடம், 1952 முதல் சுற்றுலாத் தளமாகவும் உணவகமாகவும் செயல்பட்டு வந்தது.

ஜெர்மனியிலும் ஒஸ்திரியாவிலும் ஹிட்லருடன் தொடர்புடைய வரலாற்று இடங்களைப் பாதுகாப்பதா, வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதா அல்லது இடித்துத் தள்ளுவதா என்ற விவாதம் தொடர்ந்து நிலவி வருகின்றது.
இந்த நிலையில், தீவிர வலதுசாரி மற்றும் நியோ-நாஸி அமைப்புகள் இவற்றை வழிபாட்டுத் தலங்களாகப் பயன்படுத்துவதைத் தடுக்க இத்தகைய நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.