யாழ்.நூலக எரிப்பு வரலாற்றை தொலைத்து எரிப்பு நாளை மறந்த தமிழா எப்போது நீ விழிப்பாய்!
‘31மே 1981 இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து ஏற்பட்ட கலகத்தின் போதே யாழ்ப்பாணப் பொது நூலகம் தற்செயலாக எரிக்கப்பட்டுவிட்டது என இனவாத ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அரசியல் தந்திரத்தை அறியாது அதனை நியாயப்படுத்தவே இன்று தமிழினத்தின் சில கோடாலிக்காம்புகள் முனைகின்றன.
நூலகம் எரிக்கப்பட்ட திகதியை யூன் 1ம் திகதியாக மாற்றுவதன் மூலம் வரலாற்றை மறைக்க, திரிக்க சில கோடால்க்காம்புகள் முயல்கின்றனர்.
நூலகம் எரிக்கப்பட்ட திகதியை மறுதலிக்க முற்படுபவர்கள் சிங்கள அரசையும் அமைச்சர்களையும் பாதுகாக்கின்றனர்.
இச்செயல் இவர்கள் தமது சுயநலன்களை அடைவதற்கே. இது மிக மோசமான இனத்துரோகமும், வரலாற்று மோசடியுமாகும்.
சிங்கள அரசின் திட்டமிடப்பட்ட முறை
யாழ்.நூலகம் 31மே 1981ல் எரிக்கப்பட்டதை கண்களால் கண்ட சாட்சியங்கள் ஏராளமுண்டு. யாழ்ப்பாண பொது நூலக எரிப்பு பற்றிய யாழ்ப்பாண பொலிஸ் நிலைய முறைப்பாட்டு பதிவு, விசாரணைக்குழு அறிக்கை போன்ற ஆவணங்களை அன்றைய காலத்தில் (1981-1985 வரை) பார்வையிடும் வாய்ப்பும் இருந்துள்ளது.
ஆனால் அன்று யாழ்ப்பாண நூலக எரிப்பினைப் பற்றிய மறுவாசிப்புச் செய்யவே ஆவணப்படுத்தவே தயாரில்லாத சேம்பேறிச் சமூகம் இன்று வரலாற்றை மறந்து, தொலைத்துவிட்டு ஒப்பாரி வைக்கிறது.
1981 மே 31 இரவு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வெறியாட்டங்கள் எதுவுமே தற்செயலாக நிகழ்ந்தவையல்ல. அவை மிகச்சாதுரியமாக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டவையே.
மே 31 இரவு நாச்சிமார் கோயிலடியில் தமிழர் விடுதலை கூட்டணியினரின் கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தினாலென்ன நடந்தாவிட்டாலும் சிங்கள அரசின் திட்டமிடப்பட்ட முறையில் யாழ் நூலகமும், யாழ் நகரமும் எரிக்கப்பட்டு இருக்கும் என்பது நிச்சயம்.
ஏனெனில் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி அதற்கான ஆயத்தங்களோடு தான் ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்களினால் 31-05-1981 மதியம் யாழ்ப்பாணத்திற்கு மூன்று பஸ்களில் சுமார் 150 வரையான காடையர்களை சிங்களதேசத்திலிருந்து தருவிக்கப்பட்டிருந்தனர்.அவர்கள் துரையப்பா விளையாட்டரங்கிலேயே தங்கியிருந்தனர், 04 யூன் 1981 மாவட்டசபை தேர்தல் நடந்தது அதன் பாதுகாப்பிற்கென்ற காரணத்துடன் reserve police எனச் சொல்லப்படுபவர்கள் துரையப்பா விளையாட்டரங்கு படிகளில் படுத்தெழும்பிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் உண்மையில் விடுப்பில் இருந்த பொலிஸ், மற்றும் கடமையிலிருந்த பொலிஸாராவர். மேலும் யாழ் நுாலகம் மக்கள் நடமாட்டம் அற்றபகுதி என்பதன் காரணமாக காடையர்களின் முதல் இலக்கு நூலகமாக இருந்துள்ளது.
விடுப்பில் இருந்த பொலிஸ், கடமையிலிருந்த பொலிஸ் ஆகியோரையும் பயன்படுத்தி அவர்களின் அனுசரனையுடன் 31-05-1981 அன்று பின்னிரவு 19:30 மணியளவில் யாழ்.நூலகத்தை எரியூட்டினர்.
சாம்பலான நூல்கள்
ஆனால் யாழ். நூலகத்தை எரியூட்டப்பட்ட செய்தி யூன் 01ல் செய்தியே கசிய ஆரம்பித்தது. மறுநாள் யூன் 02ல் எரிந்துபோன கட்டிடத்தையும், சாம்பலாகிப் போன நூல்களையும் மக்கள் பார்வையிட்டனர்.
மே 31 எரிக்கப்பட்ட நூலகம் இரு இரவுகள் எரிந்து அணைந்த நிலையில் யூன் 02 இல் சாம்பல் மேடாகக் காட்சியளித்தது. ஆனால் யூன் 2 அன்றுதான் நூலகம் பலராலும் பார்வையிடப்பட்டதால் நூலகம் அன்று இரவு தான் எரிக்கப்பட்டது என்ற ஊகத்தின் அடிப்படையிலேயே அன்றைய காலத்தில் வந்த தமிழ்ப் பத்திரிகை, ஊடகங்களில் யூன் 1 திகதி எனச் செய்திகள் வெளிவந்தது.
அன்றும் ஒரே நிருபரே பல ஊடகங்களுக்கும் செய்தி வழங்கும் நிலை இருந்தமை கவனிக்கத்தக்கது. அதுவும் இச்செய்தி தவறாக பல தமிழ் ஊடகங்களில் பிரசுரிக்கப்படக் காரணமாக அமைந்துவிட்டது.
தேடலற்ற, பொறுப்புணர்வற்ற, சோம்பேறித்தனமான செய்தி வழங்கல்கள் தவறான யூன் 1ம் திகதி என்ற திகதிக் கணிப்புக்கு இட்டுச்சென்றுவிட்டது.ஆனால் உத்தியோகபூர்வ ஆவணங்கள், பொலிஸ் பதிவுகள், ஆங்கிலப் பதிவுகள் அனைத்திலும் யாழ் நூலகம் மே 31இல் எரிக்கப்பட்டதை மிகச்சரியாகப் பதிவு செய்தன.
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரியூட்டப்பட்ட திகதி நேரத்திற்கு ஏன் இவ்வளவு பிரச்சினை என்று பலர் தங்களை புத்திசாலிகளாக எண்ணிக்கொண்டு கேள்விகள் கேட்டுள்ளனர்.
யாழ். நுாலக எரிப்பு திட்டமிடப்பட்ட பண்பாட்டு படுகொலை. இது இனப்படுகொலையின் ஒரு அங்கமாகும். எனவே பண்பாடுப்படுகொலை என்பதை நிறுபிப்பதற்கான முக்கிய சான்றாதாரம் எரிக்கப்பட்ட நேரமும் திகதியும். என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
சில நிகழ்வுகளுக்கும், சம்பவங்களுக்கும் மிகத்துலக்கமான வரலாற்று முக்கியத்துவம் உண்டு.ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னேயுள்ள இயங்குவிதியை புரிந்துகொள்ள குறிப்பிட்ட நிகழ்வை சரியாக பதிவிட, ஆவணப்படுத்த வேண்டும். எந்த நிகழ்வின் பின்னணியையும் புரிந்துகொள்ள காலக்குறிப்பு மிகமுக்கியமானது.
நிகழ்காலத்தில் வெளிவராத பல உண்மைகளும், அந்நிகழ்வுகளுக்கான காரணங்களும் அதற்கு பின்னான எதிர்காலத்தில் வெளிக்கொணரப்படுவதற்கு கடந்துபோன இறந்தகாலம் உறுதுணையாக இருக்கும்.
நேரில் பார்த்த சாட்சியங்கள்
31மே 1981ல் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த கண்களால் கண்ட சாட்சியங்களில் இருவரது சாட்சியங்கள் முக்கியமானவை.சில வருடங்களுக்கு முன் நூலக எரிப்பை அன்றைய யாழ்ப்பாண பொலிஸ் நிலைய அதிகாரி டீ.ஐ.ஜி கெ.கிருஸ்ணதாசன் தனது கண்களால் கண்ட சாட்சியமாகப் பதிவு செய்துள்ளார்.
அதில் யாழ்ப்பாணப் பொதுநூலகம் மே 31 இரவு 7:00 மணிக்கும் 7:30 மணிக்கும் இடையே எரியுட்டப்பட்டது என்று குறிப்பிட்டு உள்ளதுடன் பொலிஸ் நிலைய பதிவேடுகளிலும் அதனைப் பதிவு செய்துள்ளார்.
‘‘என்னுடைய பெயர் கெ கிருஸ்ணதாசன். நான் சிறி லங்காவின் பொலிஸ் சேவையில் யூன் 1967 முதல் டிசம்பர் 1986 வரை Officer in Charge of the Divisional Crimes Detective Bureau (DCDB), directly under the supervision of SP Jaffna Division and ASP Crimes Jaffna இருந்தேன். பின் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து குடும்பத்துடன் சிட்னியில் சந்தோசமாக வாழ்கின்றேன்.
நான் யாழ்ப்பாணத்தில் இருந்த இரண்டாவது சிரேஸ்ட்ட இன்ஸ்பெக்ரர். அப்போது HQI ஆக இருந்தவர் திரு லலித் குணசேகரா. மே 31 1981 ஏறத்தாள இரவு 7 மணிக்கும் 7:30 மணிக்கும் இடையில் நான் யாழ் பொலிஸ் நிலையத்தின் முற்பகுதியில் டிஐஜி மகேந்திரனுடன் கூட இருந்தேன்.
பொலிஸ் நிலையத்தில் இருந்து பார்க்கும் போது யாழ்பாணப் பொது நூலகத்தில் இருந்து புகைவருவதை பொலிஸ் நிலையத்தில் இருந்து பார்த்தோம்.
அப்போது எங்களுக்குத் தெரியும் யாழ்ப்பாண பொது நூலகம் தீயிடப்பட்டு இருக்கின்றது என்று. டிஐஜி மகேந்திரன் என்னை பொலிஸாரை அழைத்துக்கொண்டு நூலகக்கட்டிடத்துக்கு உடனடியாகச் செல்லுமாறு கூறினார்.
நான் உடனடியாக இரண்டு சப் இன்ஸ்பெக்டர்களையும் 10 கான்ஸ்டபிள்களையும் அழைத்துக்கொண்டு நடந்து நூலகக்கட்டிடத்தை நோக்கிச் சென்றோம். நூலகக்கட்டிடம் பொலிஸ் நிலையத்தில் இருந்து 250 யார் தூரத்திலேயே இருந்தது.
நூலகக்க ட்டிடத்தை நெருங்கி சில யார்கள் துரத்தில் சீருடையில் இருபது இராணுவத்தினர் வரை நிற்பதை அவதானித்தேன். அவர்கள் நூலக அலுமாரிகளில் இருந்த புத்தகங்களை எடுத்து தீக்கு எண்ணையூற்றுவது போல் தீக்குள் வீசிக்கொண்டிருந்தனர்.
நாங்கள் பொலிஸார் வருவதைக் கண்டதும் ஒரு அதிகாரி வெளியே வர சில இராணுவத்தினரும் அவரைத் தொடர்ந்து ஏகெ47 துப்பாக்கிகளை நீட்டியவாறு எம்மை நோக்கி உரத்த குரலில் சிங்களத்தில் 'பொலிஸ் நிலையத்துக்கு திரும்பிப் போங்கள்!' என்று கத்தியவாறு வந்தனர்.
நான் உடனடியாக டிஐஜி மகேந்திரனை தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினேன். டிஐஜி எங்களை உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு திரும்புமாறு ஆலோசணை வழங்கினார். பொலிஸ் நிலையம் திரும்பி கொஞ்சநேரத்தில் முழுக்கட்டிடமும் கொழுந்துவிட்டு எரிவதை நாங்கள் பார்த்தோம்.
டி.ஐ.ஜி யாழ் இராணுவ உயரதிகாரிகளைத் தொடர்பு கொள்ள எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. அந்த சூழ்நிலையில் பொலிஸார் இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது உசிதமான செயல் அல்ல. எனக்கு இதுவொரு மிக மோசமான அனுபவம். அதற்கு நான் வேதனையோடு சாட்சியாக இருக்கிறேன்.
அந்த நாளில் நான் கண்ட காட்சியும் அதற்கு நான் சாட்சியம் ஆனதும் என் வாழ்நாளில் இலகுவாக மறக்க முடியாதது. நான் வாழும்வரை அது என் நினைவுகளில் இருக்கும். நான் பொலிஸ் நிலையத்திற்கு திரும்பிய பின்னர் நான் என்னத்தைப் பாரத்தேனோ அவற்றைப் பதிவு செய்தேன்.
டிஐஜி உம் தன்னுடைய பதிவை மேற்கொண்டார். துரதிஸ்ட வசமாக திரு மகேந்திரன் இன்று எம்மோடு இல்லை. அவர் இருந்திருந்தால் அவரும் என்னுடைய சாட்சியத்தை ஆதரித்து இருப்பார். உறுதிப்படுத்தி இருப்பார். ஆனாலும் திருமதி மகேந்திரன் இருக்கின்றார் அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வாழ்கின்றார்.
நீங்கள் அவரைத் தொடர்பு கொண்டு திரு மகேந்திரன் அந்த வேதனையான சம்பவம் பற்றி குவாட்டர்ஸிற்கு வந்து என்ன சொன்னார் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.‘
இதேபோன்றே அன்றைய யாழ் போலிஸ் டீ.ஐ.ஜி மகேந்திரனும் இதேபோன்று மே 31 இரவு 7:00 மணிக்கும் 7:30 மணிக்கும் இடையே எரியுட்டப்பட்டது என்பதை பொலிஸ் பதிவோட்டில் பதிவுசெய்துள்ளார்.
நாச்சிமார் கோயிலடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டச் சம்பவம் பற்றிக் குறிப்பிட்ட அன்றைய யாழ்ப்பாண நகரபிதா ரா.விசுவநாதன் துப்பாக்கிச்சூடு மே 31 இரவு 8:15 மணிக்கே நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றார்.
எனவே நாச்சிமார் கோவிலடியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ முன்னரேயே யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டு இருந்தமை நடந்த சம்பவங்கள் அனைத்தும் மிகத் திட்டமிட்ட அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது என்பதற்கு இவை மிக முக்கியமான சாட்சிகள்.
யாழ் நூலகம் எரிக்கப்பட்ட முதலாவது ஆண்டிலேயே ஏற்பட்டு 1982 இல் மே 31 இரவு தீயிடப்பட்ட நூலகம் மறுநாளும் எரிந்துகொண்டிருந்தது. மறுநாள் யூன் 2 காலையிலேய இது பரவலாக மற்றையவர்களுக்கு அறிய வந்தது. இந்தப் பின்னணியினால் தான் எரிக்கப்பட்ட நாளில் குழப்பம் ஏற்பட்டது.
அதனைத் தீர்த்து வைக்க அப்போது மேயராக இருந்த ராசா விசுவநாதன் தலைமையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கூட்டத்தில் மே 31இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டாலும் அது மறுநாளும் எரிந்துகொண்டிருந்தபடியால் யூன் 01 திகதி யாழ் நூலக எரிப்பு நினைவுநாளாக மட்டும் அறிவிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |