ஹிருணிகாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மீள் விசாரணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு (Hirunika Premachandra) எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவருக்கு இதுவரையில் விதிமுறைகள் எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில், அவர் தனிப்பட்ட முறையில், நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பத்துடன் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் அமர்வு தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படாததால் அவர் தனிப்பட்ட முறையில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஃபர்மன் காசிம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து
இதனை தொடர்ந்து, கல்கிசை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தனக்கு பிணை வழங்கிய நீதவான் உத்தரவு தொடர்பில் பிரதிவாதி ஹிருணிகா பிரேமச்சந்திர ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதாக மனுதாரர் ஹிசாம் ஜமால்டீன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அது மாத்திரமன்றி, பிரதிவாதியின் நடத்தை, தற்போது நடைபெற்று வரும் நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடுவதற்கு ஒப்பானது என்றும், நீதி நிர்வாகத்தின் மீது பொதுமக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தும் முயற்சி என்றும் மனுதாரர் ஹிசாம் ஜமால்டீன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |