உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உயர்நீதிமன்றின் அதிரடி உத்தரவு
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை விடுவித்த கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த உயர்நீதிமன்றம், விசாரணையை தொடருமாறு இன்று (05.11.2024) உத்தரவிட்டுள்ளது.
விசாரணை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் வாதத்தை முன்வைக்க அழைப்பு விடுக்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேல் நீதிமன்ற விசாரணையை எதிர்த்து சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இருவேறு மேன்முறையீட்டு மனுக்களுக்கு பதிலளிக்கும் வகையில், நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட, குமுதினி விக்ரமசிங்க, மகிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய ஐந்து நீதியரசர்கள் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்
வழக்கின் சிக்கலான தன்மையையும், தீவிரத்தன்மையையும் கருத்தில் கொண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை, விசாரணைக்கு அழைக்காமல் விடுவித்தமை ஏற்புடையதல்ல என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னதாக, 2022 பெப்ரவரி 18ஆம் திகதியன்று, குற்றப்பத்திரிகைகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்களை நிறுவுவதற்கு அரசுத் தரப்பு சாட்சியங்கள் தவறியதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற ட்ரயல்-அட்-பார் உத்தரவிட்டிருந்தது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக 2019 ஏப்ரல் 7ஆம் திகதி முதல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல்களை தடுக்க தவறியமை மற்றும் சட்டவிரோதமாக புறக்கணித்தமை தொடர்பில் சட்டமா அதிபர் 855 குற்றச்சாட்டுகளை, மேல் நீதிமன்ற ட்ரயல்-அட்-பார் அமர்வில் முன்வைத்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |