இந்திய அதானி நிறுவன திட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு
இந்திய அதானி நிறுவன திட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவினை இலங்கையின் முன்னணி சுற்றுச்சூழல் ஆர்வலர்களான பெத்தியகொட, பேராசிரியர் நிமல் குணதிலக்க மற்றும் பேராசிரியர் சரத் கோட்டகாம ஆகியோரும் மன்னார் மறை மாவட்ட ஆயர் பஸ்டியனும் இணைந்து உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.
நடைமுறை சிக்கல்கள்
மன்னாரில் முன்மொழியப்பட்ட 250 மெகாவாட் மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டத்தை கொள்முதல் மற்றும் நிர்மாணிப்பதற்கு எதிராக இந்த வழக்கு பொது நலன் சார்ந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கொள்முதல் மற்றும் நிர்மாணிப்பு என்பன அதானி கிரீன் எனர்ஜி பி.டி லிமிடெட் மற்றும் அல்லது அதானி கிரீன் எனர்ஜி எஸ்.எல்.லிமிடெட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நிலையான எரிசக்தி ஆணையம், மத்திய சுற்றுச்சூழல் ஆணையம், முதலீட்டு சபை, இலங்கை மின்சார சபை, பொது பயன்பாட்டு ஆணையம், மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் உட்பட்ட 67 தரப்பினர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டின் நம்பகத்தன்மை, கூறப்பட்ட ஒப்பந்தத்தை வழங்குவதில் சில நடைமுறை சிக்கல்கள் என்பன திட்டத்தின் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
இந்தநிலையில், சுற்றுச்சூழல், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், பொது நிதி உள்ளிட்ட பொது சொத்துக்களைப் பாதுகாக்கவும் இலங்கை பொது மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாதுகாக்கவும், அதன் வருங்கால சந்ததியினரின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாதுகாக்கவும், தேசிய நலனை மேலும் மேம்படுத்துவதற்கும், பாதுகாக்கவும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதார்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |