லண்டனில் 800ற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்.! பல விமானங்கள் ரத்து
பிரித்தானியாவில் நிலவி வந்த கடுமையான வெப்ப அலையைத் தொடர்ந்து, திடீரென ஏற்பட்ட இடிமின்னலுடன் கூடிய கனமழை காரணமாக இலண்டனின் ஹீத்ரோ மற்றும் காட்விக் விமான நிலையங்களில் 800-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகியுள்ளதோடு, டஜன் கணக்கிலான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்விரு முக்கிய விமான நிலையங்களிலும் இன்று(27) சனிக்கிழமையன்று தலா 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 'பிளைட்அவேர்' விமானக் கண்காணிப்புத் தளம் தெரிவித்துள்ளது.
தற்காலிகக் கட்டுப்பாடுகள்
சில விமானங்கள் 11 மணி நேரம் வரை தாமதமாகியுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக, சில பயணிகள் விமானத்திற்குள்ளேயே 4 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த பின்னரே தங்களின் பயணம் இரத்து செய்யப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் தங்களது குமுறல்களைப் பகிர்ந்துள்ளனர்.

பிரித்தானியாவின் தென்கிழக்கு பகுதி மற்றும் வடமேற்கு ஐரோப்பிய வான்வெளியில் உருவாகியுள்ள அடர்ந்த புயல் மேகங்கள் காரணமாக வான்வழிப் போக்குவரத்தில் தற்காலிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதே இந்தத் தாமதத்திற்குக் காரணம் எனப் பிரித்தானியாவின் தேசிய விமானப் போக்குவரத்துச் சேவை (NATS) அமைப்பு விளக்கியுள்ளது.
விமானங்கள் தாமதம்
சஃபோல்க் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று ஜூன் மாதத்திற்கான மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்த நிலையில், இந்தத் திடீர் வானிலை மாற்றம் நிகழ்ந்துள்ளது.

மோசமான வானிலை காரணமாகப் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஈசிஜெட் போன்ற முன்னணி விமான நிறுவனங்கள் தங்களது விமான அட்டவணைகளை மாற்றியமைத்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வசதிகளைச் செய்து தருவதாக உறுதியளித்துள்ளன.