இந்தியாவை மிரட்டும் வெப்ப அலையால் 98 பேர் மரணம்: விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
இந்தியாவின் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பநிலை காரணமாக, கடந்த சில நாள்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய அரச புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (18.06.2023) வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரவியலில், வட மாநிலங்களில் கோடையின் தாக்கம் இன்னும் தீவிரமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உத்தரப் பிரதேசத்தின் பல்லியா பகுதியில் ஜூன் 15-17 திகதிகளில் தீவிர வெப்பத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுமார் 400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதைக் கடந்தவர்கள் என அப்பகுதியின் தலைமை மருத்துவ அதிகாரி ஜெயந்த் குமார் தெரிவித்துள்ளார்.
வெப்ப அலை தீவிரம்
பெரும்பாலானோர் மாரடைப்பு, மூளை நரம்பு அடைப்பு, வயிற்றுப் போக்கு ஆகிய பிரச்சினைகளுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இந்த பகுதிகளில் வழக்கத்தை விட 4.7 டிகிரி வெப்பம் கூடுதலாக இருந்துள்ளது.
அதேபோல பீகாரிலும் தீவிர வெப்பம் காரணமாகக் கடந்த 24 மணி நேரத்தில் 44 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அம்மாநில தலைநகர் பட்னாவில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு நேற்றைய தினம் (17.06.2023) வெப்பம் 44.7 டிகிரி வரை சென்று உச்சம் தொட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம்
பீகார் மாநிலத்தில் வெப்ப அலை தீவிரமாக வீசுவதால் அங்குள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஜூன் 24ஆம் திகதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மத்தியப் பிரதேசத்திலும் ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கிழக்கு, மத்திய கிழக்குப் பகுதிகளில் அடுத்து 3-4 நாள்கள் தீவிர வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம், கிழக்கு உத்தரப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் கடலோர ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாகப் பீகாரின் பல பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |