கோட்டாபய அரசாங்கத்துக்கு மற்றும் ஒரு நெருக்கடி! சர்வதேசத்திடம் முறையிடப்போகும் தொழிற்சங்கம்! (Photos)
சுகாதார சேவையை அத்தியாசிய சேவையாக பிரகடனப்படுத்தி, வெளியிடப்பட்ட வர்த்தமானி, நாட்டில் மீண்டும் ஜே ஆரின் சர்வதிகார ஆட்சி காலத்துக்கு செல்லும் முயற்சியாகும் என்று சுகாதார சேவையாளர் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த, அவருக்கு நெருங்கியவர்கள் செயற்படுவதாக சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார சேவையை சேர்ந்த 65 ஆயிரம் பணியாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க இதுவரை உண்மையாக பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்படவில்லை.
மாறாக நீதிமன்றத்துக்கு இந்த போராட்டத்தை முன்னிலைப்படுத்துவதற்கான ஆவணத் தயாரிப்புக்காகவே சுகாதார அமைச்சரினால் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டது.
சுகாதார சேவையாளர்களின் போராட்டம் சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் இடம்பெறுவதாக குறிப்பிட்ட அவர், பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஏற்பாடுகளை செய்யுமாறு, அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ குட்டியாராச்சி மற்றும் டயானா கமமே ஆகியோரிடமும் தாதியர் சேவை தொழிற்சங்க தலைவர் முருத்துட்டுவே ஆனந்த தேரரிடமும் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
எனினும் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக பேச்சுவார்த்தையை நடத்தவேண்டும் என்று ஜனாதிபதியிடம் சென்று கூறுவதற்கு, சுகாதார அமைச்சருக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ முதுகெலும்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் சுகாதார பணியாளர்களின் மேலதிக கொடுப்பனவுகள் உட்பட்ட வேதன பட்டியலை, செய்தித்தாள்களில் பிரசுரிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறியுள்ளமையை சுகாதார பாிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன கண்டித்துள்ளார்.
சுகாதார அமைச்சர், சுகாதார சேவையாளர்களின் வேதனப்பட்டியலை செய்தித்தாள்களில் பிரசுரிப்பதற்கு முன்னர், சுகாதார சேவையில் உள்ள பணிப்பாளர்கள் மற்றும் உயரதிகாரிகளின் வேதனப்பட்டியல்களையும் அவர்களின் மேலதிகக் கொடுப்பனவு விடயங்களையும் செய்தித்தாள்களில் பிரசுரிக்கவேண்டும் என்று அவர் சவால் விடுத்தார்.
இதேவேளை அரசாங்கம், சுகாதார சேவையாளர்களின்பிரச்சினையை தீர்ப்பதில் அக்கறை காட்டவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ள அவர், நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி தொடர்பில் சட்ட நடவடிக்கைக்கு செல்வது தொடர்பில் ஆலோசனைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



