சுகாதார துறை கடும் நெருக்கடியில் எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
புற்றுநோய் சிறுநீரக நோய் உள்ளிட்ட நோய்களுக்கு தேவையான அத்தியாவசியமான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் நாட்டின் சுகாதாரத்துறை கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலவச சுகாதார சேவை பாரதூரமான நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளது என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பு ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் சமால் சஞ்சீவ இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் சுகாதார சேவையின் தரம் துரித கதியில் வீழ்ச்சி அடைந்து செல்லும் போக்கு காணப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மிகவும் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் வழங்குவதற்கு பதிலாக சுகாதார சேவையை கிரமமாக தனியார் மயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்திய ஆதிக்கத்திற்கு அடிபணிவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை சுகாதாரத்துறை எதிர்நோக்கும் பிரதான இருபது பிரச்சினைகள் தொடர்பில் இந்த ஊடக சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
• மருந்து மற்றும் ஆய்வக நெருக்கடி: புற்றுநோய், சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறை, தனியார் மருந்தகங்களில் மருந்து விலை உயர்வு, அரச மருத்துவமனைகளில் ஆய்வக சேவைகள் பாதிப்பு.
• பரிசோதனை சேவைகள் பாதிப்பு: CT, MRI, அஞ்சியோகிராம் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) சேவைகள் தடைபடுதல்.
• தரமற்ற மருந்துகள்: மருந்து ஒழுங்குமுறை அமைப்பு பலவீனமடைந்ததால் தரமற்ற மருந்துகள் நாட்டிற்குள் வருதல் மற்றும் சில இந்திய நிறுவனங்களுக்கு தேவையற்ற முன்னுரிமை வழங்கப்படுதல்.
• மனித வள பற்றாக்குறை: சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்தல், பதவி வெற்றிடங்களை நிரப்ப அரசின் தாமதம்.
• நிர்வாகப் பலவீனங்கள்: கணக்காய்வு நடவடிக்கைகள் பாதிப்பு, ஊழல் மோசடிகளில் அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமை, தேசிய சுகாதார கொள்கையை சட்டபூர்வமாக்குவதில் தாமதம்.
• தாய் மற்றும் குழந்தை சுகாதாரம்: இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு ‘திரிபோஷ’ வழங்குவதில் தாமதம், ஆரம்ப நிலை சுகாதார பணியாளர் பற்றாக்குறை.
இதற்கு மேலாக, இதய அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகளுக்கான நீண்ட காத்திருப்பு பட்டியல்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் போதிய வசதிகள் இல்லாமை காரணமாக நோயாளிகளின் உயிர் கடும் ஆபத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கடுமையான பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு தற்காலிக “பிளாஸ்டர் தீர்வுகள்” மட்டுமே வழங்கி பொறுப்பற்ற வகையில் செயல்படுவதாகக் டொக்டர் சாமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் துறைசார் அமைச்சர் உடனடியாக தலையிட்டு தீர்வுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அவ்வாறு செய்யத் தவறினால், இலவச சுகாதார சேவையை பாதுகாப்பதற்காக எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் பெரிய அளவிலான போராட்ட தொடர்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.