தம்மிக்க பண்டாரவுக்கு சுகாதார மருத்துவ அதிகாரி எச்சரிக்கை
கேகாலையின் ஆயர்வேத வைத்தியரான தம்மிக்க பண்டாரவுக்கு சுகாதார மருத்துவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றுக்காக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மருந்தை பெற்றுக் கொள்வதற்காக தம்மிக்க பண்டாரவின் வீட்டுக்கு முன்னாள், தொடர்ந்தும் பொது மக்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளையும் புறக்கணித்து கூடி வருகின்றமை தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தம்மிக்க பண்டாரவின் ஆயர்வேத மருந்தைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று கேகாலையில் உள்ள அவரின் வீட்டின் முன்னால் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொரோனா ஒழுங்குவிதிகளையும் மீறி ஒன்று கூடியுள்ளனர்.
இந்த நிலையில் எதிர்காலத்திலும் கொரோனா தனிமை விதிகள் மீறப்பட்டால் தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எச்சரிக்கையின் மத்தியில் இரண்டாவது தடவையாகவும் தம்மிக்கவின் மருந்தைப் பெறறுக் கொள்வதற்காக அதிகளான பொதுமக்கள் இன்று கூடியுள்ளனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் ஒன்றுகூடும் போது முகக்கவசங்களை அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது என்பவற்றை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதார மருத்துவ அதிகாரி அறிவித்துள்ளார்.
இதேவேளை இன்றைய தினத்தில் தம்மிக்க பண்டாரவும், பொது மக்களும் இந்த சுகாதார ஒழுங்கு விதிகளை புறக்கணித்துள்ளதாக வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
பொது மக்களை கட்டுப்படுத்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட போதும் அவர்களால் அதனை மேற்கொள்ள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் தேசிய ஆயர்வேத திணைக்களத்தினால் தம்மிக்கவின் மருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளமையால் அதனை விநியோகிப்பதை தடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இவ்வாறிருக்க கேகாலையில் இன்று கொரோனா ஒழுங்குவிதிகள் மீறப்பட்டதாக எவ்வித முறைப்பாடுகளும் தமக்கு கிடைக்கவில்லை என்று கொரோனா தடுப்பு செயலகத்தின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.