ரணிலின் வருகையின் பின் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு- கேமராவால் தாக்கப்பட்ட காவலர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது நீதிமன்றத்திற்கு வந்திருந்த அவருடைய காவலர் ஒருவரை தனியார் ஊடகத்தின் ஒளிப்பதிவாளர் ஒருவர் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் இன்று(30.09.2026) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் வாயிலுக்கு அருகே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி வெளியேறிக் கொண்டிருந்த வேளையில், அவருடைய காவலர்களும், பொலிஸாரும் அவரை சூழ்ந்திருந்தனர்.
தாக்கப்பட்ட ரணிலின் காவலர்
இதன்போது, ரணிலின் காவலர் ஒருவரை தனியார் ஊடகத்தின் ஒளிப்பதிவாளர் ஒருவர் தன்னுடைய கேமராவால் தாக்கியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்குப் பாதுகாப்பு அளித்தபோது தாக்கப்பட்ட அதிகாரி, பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்ததோடு, பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த பல பத்திரிகையாளர்களின் கேமராக்களில், அந்த ஒளிப்பதிவாளர் தனது கேமராவால் பாதுகாப்பு காவலரின் தலையில் அடிக்கும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது.
எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்கும் முன் திட்டங்கள் இருந்தனவா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.