வாகனங்களை மோதித் தள்ளி தப்பிச் சென்ற வாகனம் : நான்கு பேர் படுகாயம்(Photos)
வவுனியா நகரப்பகுதியில் வேகமாக சென்ற ஹயஸ் ரக வாகனம் ஒன்று முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கிள்களை மோதித் தள்ளி தப்பிச் சென்றதில் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று (17) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். வீதி ஊடாக ஏ9 வீதியில் வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர்களை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது.
அத்துடன், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக நகரில் இருந்து யாழ். வீதி நோக்கிச் சென்ற இரண்டு முச்சக்கர வண்டிகளையும் மோதித்தள்ளியுள்ளது.
தொடர்ச்சியாக நிறுத்தாமல் சென்ற குறித்த ஹயஸ் ரக வாகனம் இலுப்பையடிப் பகுதியில் மேலும் ஒரு முச்சக்கர வண்டியினை மோதித்தள்ளியதுடன், அங்கிருந்தும் ஹொரவப்பொத்தானை வீதி வழியாக சென்று வான் ஒன்றையும் மோதித் தள்ளியதுடன் குறித்த ஹயஸ் வாகனம் தொடர்ந்தும் தப்பிச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் குறித்த வாகனத்தினை துரத்திச் சென்றதுடன், பொலிஸாருடன் இணைந்து விசேட அதிரடிப்படையினரும் குறித்த வாகனத்தினை துரத்திச் சென்றுள்ளனர்.
அதிவேகமாக சென்ற வாகனம் அனுராதபுரம் மாவட்டத்தின் ஹொரவப்பொத்தானை பகுதியில் வைத்து பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தால் வவுனியா நகரப்பகுதியில் ஆசிகுளம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர், மடுகந்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் , திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் , உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஆகிய நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய அசம்பாவிதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.
குறித்த வானின் சாரதி மது போதையில் இருந்தாரா அல்லது போதைப்பொருட்கள் எதனையும் கடத்திச் சென்றாரா என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.