அதிக அளவில் கடன் பெற்றுக் கொள்ளும் இலங்கை மக்கள்
இலங்கையின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு கடன் வழங்கி வருவதாகவும் இதனால் மக்களின் கடன் சுமை பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வீட்டு அலகுகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி, முறையான நிதித்துறையின் மொத்தக் கடன் வழங்கல்களில் 41.87 சதவீதமானது வீட்டு அலகுக் கடனாகும். மேலும், இக்கடன் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு நிறைவடையும் போது 25.42% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.

இது கடந்த ஆண்டு (2025) இரண்டாம் காலாண்டு முடிவில் பதிவான 14.8 சதவீத வளர்ச்சியை விடக் கணிசமாக உயர்ந்த மதிப்பாகும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு காலாண்டுகளிலும் ஒவ்வொரு காலாண்டிலும் தொடர்ச்சியாக 20 சதவீதத்தைத் தாண்டிய வளர்ச்சி பதிவாகியுள்ளதன் மூலம் வீட்டு அலகுகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையில் பாரிய அதிகரிப்பு காணப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடன்களை வழங்குவதில் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினரும் பங்களிப்புச் செய்துள்ளனர்.
அவற்றுள், வீட்டு அலகிற்கு கடன் வழங்குவதில் வங்கித்துறை முக்கிய மூலாரமாகத் திகழ்ந்ததுடன், 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு நிறைவடையும் போது வங்கித்துறையினால் வீட்டு அலகுகளுக்கு வழங்கப்பட்ட கடன் அதன் மொத்தக் கடன் தொகையில் 62.5 சதவீதம் என்ற உயர் மதிப்பை எட்டியுள்ளது.
குடும்பப் பிரிவிற்கு கடன் வழங்குவதில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் ஈடுபாட்டைக் காட்டும் வகையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மூலம் இப்பிரிவிற்கு வழங்கப்பட்ட கடன்களும் வளர்ச்சியடைந்துள்ளன.
இலங்கை கடன் தகவல் பணியகத்திடம் இருந்து பெறப்பட்ட மொத்தக் கடன் தகவல்களின் அடிப்படையில், வீட்டு மற்றும் நிறுவனப் பிரிவுகளில் ஏற்படக்கூடிய சாத்தியமான நிதி அபாயங்களை மதிப்பீடு செய்து மத்திய வங்கி இதனை வெளிப்படுத்தியுள்ளது.