நாங்கள் பல்வேறு அனர்த்தங்களை சந்தித்தவர்களாக இருக்கின்றோம்! கிளிநொச்சி அரச அதிபர்
சுனாமியினால் இழப்புக்களை எமது மாவட்டம் சந்திக்காத போதும், பல்வேறு அனர்த்தங்களை நாங்கள் சந்தித்தவர்களாக இருக்கின்றோம் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்துகொண்டு விழிப்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் நடந்தேறியதான சுனாமி எனும் அனர்த்தத்தின் பிற்பாடு நாட்டில் அனர்த்த முகாமைத்துவத்திற்கான பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு தேசிய ரீதியில் அந்த அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக விழிப்புணர்வுகள் மற்றும் தடுப்பு நிகழ்ச்சி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அனர்த்தங்கள் வராமல் காக்க வேண்டியதும் எமது பொறுப்பாக இருக்கின்றது. பல அனர்த்தங்கள் இயற்கையாக அமைகின்ற அனர்த்தங்களாகவும் இருக்கின்றன. அதேவேளை மனிதர்களால் ஏற்படுகின்ற அனர்த்தங்களும் நிகழ்ந்தேறி வருகின்றன.
பல இயற்கையான அனர்த்தங்களுக்கு மனிதர்களினுடைய செயற்பாடுகளும் சில சந்தர்ப்பங்களில் வழியமைப்பதாக அமைந்திருக்கின்றது.
உண்மையில் சுனாமியினால் இழப்புக்களை எமது மாவட்டம் சந்திக்காத பொழுதும், பல்வேறு அனர்த்தங்களை நாங்கள் சந்தித்தவர்களாக இருக்கின்றோம்.
2018ஆம் ஆண்டு பெரியதொரு வெள்ள அனர்த்தத்திற்குள்ளான மாவட்டமாக எமது மாவட்டம் அமைந்திருக்கின்றது. தொடர்ச்சியாக வெள்ளம் மற்றும் வரட்சியினால் பாதிக்கின்ற மாவட்டமாக எமது மாவட்டம் இருக்கின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதுகாத்துக் கொள்வதற்கும், வாழ்வாதாரத்தில் மேம்படுவதற்கும் மக்கள் புரிந்து கொள்வதற்கு அவர்ககளிற்கு நாங்கள் வழிவகுக்கின்ற அதேவேளையிலே, உத்தியோகத்தர்களாக அவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பாகவும் அமைந்திருக்கின்றது.
மண் அகழ்வு, காடழிப்பு ஆகியன உண்மையில் அனர்த்தத்திற்கு வழியமைக்கின்றனவாக அமைந்திருக்கின்றது. இதன் ஊடாக நாங்கள் இயற்கை சூழலை அனர்த்தத்திற்குள்ளாக்குபவர்களாக இருக்கின்றோம்.
எனவே இவ்விதமான விடயங்களில் நாங்கள் எங்களாலான முயற்சிகளை முன்னெடுத்து அனர்த்த தணிப்பிற்கும், அனர்த்தம் ஏற்படாத வகையிலும் தடுக்க வேண்டிய தேவை அவசயமாக இருக்கின்றது.
அது மட்டுமல்லாது வெள்ள அபாயங்களிலிருந்து எங்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒன்று இவ்வருடம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதியில் நாம் மேற்கொண்டுள்ளோம். அதன் ஊடாக ஓரளவு வெள்ள அபாயத்திலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறான நிகழ்ச்சி திட்டங்களின் ஊடாக ஓரளவு அனர்த்தங்களை தடுக்க கூடியதாக இருக்கின்றது எவ்வாறாயினும் சில அனர்த்தங்கள் எங்களை கைமீறி செல்கின்ற நிலைமைகளும் இருக்கின்றன. அவ்வாறான நிலையில் மக்கள் அறிவுறுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.
அவ்வாறான நேரங்களில் குறிப்பாக உத்தியோகத்தர்களாகிய நாங்கள் முழுமையாக நின்று செயல்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
குறிப்பாக இவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் கடமைகளை சிறப்பாக ஆற்றி வருகின்றீர்கள். தொடர்ந்தும் அவ்வாறான பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கின்றேன்.
வருகின்ற வருடங்களிலும் எமது பிரதேசம் பாதுகாப்பானதாக அமையவும், அனர்த்தமற்ற பிரதேசமாக எமது மாவட்டம் விளங்க வேண்டும் என்பதும் எங்களுடைய அவா.
தற்போது கொவிட் 19 வைரஸ் அபாயமுள்ளதாக நாடு முழுவதும் காணப்படுகின்றது. அந்த அபாயத்திற்கு உட்பட்டதாக கிளிநொச்சி மாவட்டமும் இருக்கின்றது.
எனவே அவற்றிலிருந்து நாங்களும் எங்களை சார்ந்து உள்ளவர்களையும் பாதுகாக்கின்ற அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டும். வருகின்ற வருடம் சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.