ஹட்டனில் உள்ள வெதுப்பகத்திற்கு எதிரான செய்தி தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஹட்டன் நகரில் உள்ள வெதுப்பகம் ஒன்றின் நற்பெயருக்கும், வர்த்தகத்திற்கும் கலங்கம் பாதிப்பு ஏற்படும் வகையில் செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனம் ஒன்றுக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
ஹட்டன் நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி நேரு கருணாகரன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இந்த வழக்கு தொடர்பாக ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்," ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட வெதுப்பகம் ஒன்றில் வெட்டுப்பாண் ஒன்றினை வாங்கி சென்ற நபர் அதனை சாப்பிட முற்படும் போது அதில் மனித விரலின் வெட்டுகாயத்தின் தோல் துண்டு இருந்ததாக தெரிவித்து காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
அத்துடன் அவர் குறித்த காணொளியில், வெதுப்பகத்திற்கு பல முறை சுகாதார நடவடிக்கைகள் தொடர்பாக எச்சரித்துள்ளதாகவும் இதனை சுகாதார பரிசோதகர் உறுதிபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து கடை உரிமையாளர் இணைய வழி குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கு கனணி பிரிவு முறைபாடு செய்தும் குறித்த காணொளி தொடர்ந்தும் பகிரப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியினை பகிர்ந்த ஊடகத்திடம், வெதுப்பகத்தின் உரிமையாளர் உரைாயடிய போது நாங்கள் பொது சுகாதார உத்தியோகத்தரிடம் உறுதிப்படுத்திய பின்னரே செய்தியினை வெளியிட்டுள்ளோம். நீங்கள் தேவைப்பட்டால் எந்த சட்டநடவடிக்கையும் எடுக்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
அதனையடுத்து கடை உரிமையாளர் ஹட்டன் நீதிமன்றில் குறித்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டினை பரீசீலித்த நீதிமன்றம் உடனடியாக இந்த காணொளியினை நீக்குமாறு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் இது தொடர்பாக 14 நாட்களில், வெதுப்பக உரிமையாளரால் குறிப்பிட்டு முறைப்பாடு செய்யப்பட்ட ஊடகங்கள் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.




