மண்சரிவு அபாய பகுதியில் வசிக்க கட்டாயப்படுத்தப்படும் மக்கள் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
தலவாக்கலை - கிரேட் வெஸ்டர்ன் பகுதியில் வாழும் மக்கள், மண்சரிவு அபாய பகுதியில் தம்மை மீளக் குடியேறுமாறு வலியுறுத்தப்படுவதற்கு எதிராகவும், தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கோரியும் ஹட்டன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
டிட்வா புயலின் தாக்கம்
கடந்த மாதம் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கிரேட்வெஸ்டர்ன் பகுதியில் உள்ள மக்கள் இடம்பெயர்ந்து அருகிலிருக்கும் பாடசாலையில் தற்காலிகமாக குடியேறினர்.
எனினும், எதிர்வரும் 5ஆம் திகதி குறித்த பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவிருப்பதால், மீண்டும் மண்சரிவு அபாயம் நிறைந்த பகுதிக்கே அந்த மக்கள் சென்று மீளக் குடியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினர் குறித்த பகுதியில் ஆய்வு செய்த போதும், அது சரியான முறையில் மேற்கொள்ளப்படாமையினால் தாம் மீண்டும் மண்சரிவு ஆபத்து நிறைந்த பகுதிக்கு சென்று குடியமர வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாக அந்த மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மக்களின் கோரிக்கை
குடியேறுவதற்கு நிரந்தர நிலம் வழங்கப்பட்டால், தற்காலிகமாக அல்லது சிறிய வீட்டைக் கட்டி தங்கள் உயிரைப் பாதுகாக்க தயாராக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பீதுருதாலகலை மலைக்கு அடிவாரத்தில் வசித்த சுமார் 65 குடும்பங்களே இவ்வாறான நெருக்கடி நிலைக்கு முகம்கொடுத்துள்ளனர்.
அவர்கள் வசித்த வீடுகளில் பல வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதோடு நிலம் தாழிறங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், தற்போது மீளவும் குறித்த இடத்தில் தம்மை குடியேற்ற அரச அதிகாரிகள் பணித்துள்ள நிலையில், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும், தமக்கு நிரந்த தீர்வைக் கோரியும் அந்த மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam