அஸ்வெசும மற்றும் நிவாரணங்கள் பெற குவியும் மக்கள் - நெருக்கடியால் ஊழியர்கள் வெளிநடப்பு
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு பல பகுதிகளிலிருந்து அஸ்வெசும மற்றும் நிவாரணங்களை பெற மக்கள் படையெடுத்ததன் காரணமாக கடும் இட நெருக்கடி நிலைமை ஏற்பட்டதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் உருவானதை தொடர்ந்து பொலிஸார் அவ்விடத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.
2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பிரதேச செயலகம் தற்காலிகமாக லிந்துலை நகரசபைக்கு சொந்தமான கட்டடமொன்றின் மேல் பகுதியில் இயங்கி வருகின்றது.
போதியளவு இடவசதியின்மை
குறித்த கட்டடத்தில் ஊழியர்கள் இருந்து கடமை புரிவதற்கு போதியளவு இடவசதி இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 34 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுவதுடன், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சனத்தொகை காணப்படுகின்றது.

இந்நிலையில், அரசாங்கம் இம்மாத இறுதிக்குள் அஸ்வெசும கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தமையினாலும், சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணங்கள் பெற்றுக்கொள்வதற்காகவும் அதிகமான மக்கள் வருகை தந்துள்ளனர்.
குறித்த கட்டடத்தில் போதியளவு மலசலகூட வசதிகளோ, குடிநீர் வசதிகளோ, இடவசதியோ கிடையாது. இதன் காரணமாக நிவாரணம் பெறுவதற்காகவும், ஏனைய தேவைகளுக்காகவும் வரும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஊழியர்களுக்கு போதியளவு வசதிகள் இல்லாமையினால் மக்கள் சேவைகளை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல்கள் காணப்படுவதாகவும், இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பொது மக்கள் கருத்து
இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
பல தூர பிரதேசங்களிலிருந்து மக்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அதிகாலை முதல் காத்திருப்பதாகவும், பல மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதால் வயோதிபர்கள், தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் மயக்கமடைவதாகவும், இது குறித்து உரியவர்கள் கவனமெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்டடத்தில் இடவசதியின்மை குறித்து பல போராட்டங்கள் இடம்பெற்ற போதிலும், அவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும், எனவே அரசாங்கம் நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரை கீழ் பகுதியில் உள்ள இரண்டு பாலர் பாடசாலை கட்டடத்தையாவது பெற்றுத்தர வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, எதிர்காலத்தில் அரசாங்கத்தின் பல வேலைத்திட்டங்கள் குறித்து பிரதேச செயலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதனால் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என பலரும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரதேச செயலகத்தின் ஊழியர்கள், தேசிய விச போதைப்பொருள் ஒழிப்பு குழுவின் உறுப்பினர் வேலு சுரேஸ்வர சர்மா,பொது மக்கள் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
முகேஷ் அம்பானியிடம் இருந்து ரூ 2.6 லட்சம் கோடி இழப்பீடு கோரும் இந்தியா... தீர்ப்பு மிக விரைவில் News Lankasri