இராஜாங்க அமைச்சர்கள் நியமன விவகாரம்! ரணிலின் ஒழுக்க விரோத செயல் - ஹர்ஷ டி சில்வா சீற்றம்
நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் 37 இராஜாங்க அமைச்சர்களை நியமித்தமை ஒழுக்க விரோத செயல் இல்லையா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வரிப்பணம் எதற்கு பயன்படுத்தப்படுகின்றது?
மேலும் தெரிவிக்கையில், வரிப்பணங்களை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதோடு வரிப்பணத்தின் ஊடாக சமூக பாதுகாப்பை வழங்க வேண்டும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறுகின்றார்.
எனினும் மறுபக்கம் 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் என ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இந்த நாட்டு மக்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத சந்தர்ப்பத்தில், பாரிய நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், 94 சதவீதமாக உணவு பணவீக்கம் காணப்படும் சந்தர்ப்பத்தில், எதிர்வரும் நாட்களில் இந்த நிலை தீவிரமடையும் என உலக உணவு திட்டம் அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது நியாயமான விடயமா என அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் கேள்வி எழுப்பினார்.
நாட்டு மக்கள் வரிப்பணம் செலுத்துகின்றார்களா?
இந்நிலையில் 22 மில்லியன் மக்கள் நாட்டில் இருந்தாலும் 4 இலட்சம் மக்களே நேர்முக வரி செலுத்துவதற்காக பதிவு செய்திருக்கின்றார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
வரிக்கொள்கைகளின்படி குறைந்தபட்சம் நூற்றுக்கு 10 வீதமானவர்களாவது நேர்முக வரி செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் நம் நாட்டில் நூற்றுக்கு 2 வீதமானவர்களே நேர்முக வரிகளை செலுத்துகின்றார்கள். வரிசெலுத்துகிறவர்கள் கூட 75 வீதமான வரிகளையே செலுத்துகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தேசிய உற்பத்திகளில் வரி சதவீதங்கள் மிகவும் குறைவு. அவற்றை அதிகரிப்பதற்கு ஏதேனும் செயற்திட்டங்களை உருவாக்க வேண்டும்.
ஆகவே இந்த திட்டத்தை எந்த இடத்திலாவது ஆரம்பிக்க வேண்டும். வரி முறைமைகளை விரிவாக்கம் செய்து நேர்முக வரிகளை அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றிற்கு செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.