IMF உடன்படிக்கை ஆவணத்தை எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வெளிக்கொணருவேன்: ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை
சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொது நிதிக் குழுவின் தலைவருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
”எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி ஆவணங்களை சமர்ப்பிக்க தவறினால், பொது நிதிக் குழுவின் தலைவர் என்ற தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆவணத்தை வெளிக்கொணருவேன்” என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்
பணியாளர் நிலை ஒப்பந்தத்தின்படி அரசாங்கம் என்ன செய்ய ஒப்புக்கொண்டது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கடன்களை மறுசீரமைப்பதில் கடன் வழங்குபவர்களுடன் அரசாங்கம் உடன்பாடு செய்ய வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
உள்நாட்டுக் கடனை மறுசீரமைத்தால் அனைத்து குடிமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் 2025 ஆம் ஆண்டளவில் இலங்கை மூலதனக் கணக்குப் பற்றாக்குறையை உபரியாக மாற்ற வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் செய்திக்குறிப்பு கூறுவதாக ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை
தொடர்புகளைத் தடுக்க ஜனாதிபதி அறிமுகப்படுத்தப் போகும் புதிய சட்டக்
கட்டமைப்புகளையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அதன் மோசமான பொருளாதார நெருக்கடியுடன் போராடும் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் டொலர்கள் வரை கோரியுள்ளது.
இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்
இந்நிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒத்துழைப்பு வழங்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையில் பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கடந்த 1ஆம் திகதி அறிவித்தது.
இந்த உடன்படிக்கையில், 48 மாத வேலைத்திட்டத்துக்கு இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் வெளியிட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.