ராஜபக்ச குடும்பம் தலைமையிலான ஊழல் ஆட்சிக்கு ஹரி ஆனந்தசங்கரி கண்டனம் (VIDEO)
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சி எடுக்கின்றது என ஸ்கார்போறோ நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு வசதியாக இலங்கை அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு இராஜினாமா செய்தனர். அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவரையும் தவிர்த்து மீதமுள்ள 26 அமைச்சர்களும் இராஜினாமா செய்தனர். இதில் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவும் அடங்குவார்.
இதனை தொடர்ந்து மீண்டும் மகிந்த ராஜபக்ச அணியினர் மீண்டும் தமது அமைச்சர்களை நியமித்த நிலையில், இலங்கையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கிராமங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஸ்கார்போறோ நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கனேடிய நாடாளுமன்றில் இலங்கையின் இன்றைய நிலைமை தொடர்பாக உரையாற்றினார். அவர் தனது நாடாளுமன்ற உரையில் மேலும் தெரிவிக்கையில்,
இன்று, இலங்கையின் நிதி நெருக்கடி பற்றி ஒரு அறிக்கையை வழங்குகின்றேன். ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் ஆட்சி புரிகின்ற ராஜபக்ச சகோதரர்கள் தலைமையிலான ஊழல் ஆட்சி தோல்வியடைந்த நிலையை நோக்கிச் செல்கிறது.
மகிந்த மற்றும் கோட்டாபய மீது போர்க்குற்றங்கள், மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சி எடுக்கின்றன.
இந்த அத்தியாவசிய நிதியுதவியைக் கொண்டு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை இராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இந்த நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பது அவசியம்.
சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும், காணாமல்
ஆக்கப்பட்டவர்களுக்கான கணக்குகள் இருக்க வேண்டும், தமிழர்களின் உள்ளார்ந்த
உரிமையை அங்கீகரிக்கும் நியாயமான அரசியல் தீர்வு இருப்பதை உறுதி செய்ய
வேண்டும்'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.