மதீச பத்திரனவை புகழ்ந்து பேசிய மும்பை அணியின் தலைவர்
மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸின் வீரரான மதீச பத்திரன (Matheesha Pathirana) தான் காரணம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) கூறியுள்ளார்.
எட்டாவது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 70 ஓட்டங்கள் என்ற மும்பை அணியின்
வலுவான தொடக்கத்திற்குப் பின்னர் பத்திரனவின் நான்கு ஓவர்கள் போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
முன்னாள் தலைவர் ரோஹித் சர்மாவின் (Rohit Sharma) துணிச்சலான சதம் இருந்தபோதிலும், இசான் கிசன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை வெளியேற்றிய பத்திரனவின் பந்துவீச்சு மும்பையின் (Mumbai Indians) இன்னிங்ஸை தடம்புரளச் செய்தது.
மறைமுகத் தாக்குதல்
எனவே, சிஎஸ்கே (Chennai Super Kings) அணிக்கு பத்திரன சாதகமான வித்தியாசத்தை ஏற்படுத்தியதாக பாண்டியா கூறியுள்ளார்.
அத்துடன், அனுபவம் வாய்ந்த தோனியின் மதிப்புமிக்க ஆலோசனையிலிருந்து சென்னை அணியின் தலைவர் ருதுராஜ் கய்க்வாட் பயனடைந்தார் என்றும் பாண்டியா குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்ற ஆதரவு, தமது அணியின் முன்னோடியான ரோஹித் சர்மாவிடமிருந்து தமக்கு கிடைக்காததை அவர் மறைமுகமாகக் குறிப்பதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பாண்டியா மீது விமர்சனம்
பந்து வீசுவதற்காக பத்திரன வரும் வரை, மும்பை அணி வலுவாகவே இருந்தது என்று பாண்டியா கூறினார். மூன்று ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த முகமது நபிக்கு நான்காவது ஓவரை வழங்காமை குறித்து பாண்டியா மீது விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடைசி ஓவரை வீசும் பொறுப்பை ஏற்ற பாண்டியாவுக்கு தோனியால் பலத்த பின்னடைவு ஏற்பட்டது.
அதேவேளை, நாம் புத்திசாலியாக விளையாடினால், தொடரில் விரும்பும் இலக்கை அடைய முடியும் என பாண்டியா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |