போதைப்பொருள் கடத்தல் புள்ளி ஹரக் கட்டாவை பார்வையிட நீதிபதி விஜயம்
போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஹரக் கட்டா மற்றும் குடுசலிந்து ஆகியோரை பார்வையிடுவதற்காக நீதிபதி திலிண கமகே இன்று நேரில் விஜயம் செய்துள்ளார்.
ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன மற்றும் குடுசலிந்து எனப்படும் சலிந்து மல்ஷிக குணரத்தின ஆகியோர், பாதுகாப்பு அமைச்சின் விசேட தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தமது பாதுகாவலின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
இலங்கைக்கு அழைத்து வருகை
இதனையடுத்து அவர்கள் இருவரையும் நேரில் பார்வையிடுவதற்காக, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (16) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் விஜயம் செய்தார்.
மடகஸ்கர் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பின்னர், கடந்த 15ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் உத்தரவின் பேரில் 90 நாட்கள் அவர்களது திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான இந்த இரண்டு சந்தேக நபர்களும் கடந்த 1 ஆம் திகதி மடகாஸ்கர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.