ஹரக் கட்டாவின் உயிருக்கு அச்சுறுத்தல்! தந்தை நீதிமன்றத்தில் மனுதாக்கல்
ஹரக் கட்டா என்றழைக்கப்படும் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் நதுன் சிந்தகவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவரது தந்தை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வௌிநாட்டில் இருந்து இலங்கை அழைத்து வரப்பட்டுள்ள ஹரக் கட்டாவுக்கு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் மனுதாக்கல்
இந்நிலையில் ஹரக் கட்டாவின் தந்தையான ஓய்வுபெற்ற புகையிரத பொறியியலாளர், மெர்வின் விக்கிரமரத்ன தனது மகனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவரது உயிரைப் பாதுகாக்கும் விடயத்தில் நீதிமன்றத்தை தலையிடுமாறு கோரியும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
தடுப்புக்காவலில் உள்ள தன் மகனை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிபதிக்கு அறிவிக்காமல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து எந்தவொரு வௌியிடத்துக்கும் அழைத்துச் செல்லப்படக்கூடாது என்று தடையுத்தரவு பிறப்பிக்குமாறு அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஹரக் கட்டாவுக்கு எதிராக எட்டு நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.