நாட்டில் தற்போது ஏற்பட்டிருப்பது போர் நிறுத்தம்-சம்பிக்க ரணவக்க
நாட்டில் தற்போது போர் நிறுத்தம் ஒன்று காணப்படுவதாகவும் சமூகத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்பு உச்சக்கட்டத்திற்கு வந்துருள்ளது எனவும் 43 படைப்பிரிவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தாராளமயமாக்கல் தொடரும் சோக நிகழ்வாக வரலாற்றில் பதியப்படலாம்

எரிசக்தியை துறையை கட்டியெழுப்புவதற்காக 7 யோசனைகளுடன் கூடிய வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளமை விசேடமானது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. தாராளமய பொருளாதார மறுசீரமைப்புகளை கொண்டு வந்து 2019 ஆம் ஆண்டு வரி நிவாரணம் வழங்கப்பட்டது.
தற்போது எரிசக்தி துறையை தனியாருக்கு வழங்க சட்டமூலத்தை கொண்டு வருவது, 2002 ஆம் ஆண்டு கொண்டு வந்த தாராளமயமாக்கல் கொள்கையை தொடரும் ஒரு சோக நிகழ்வாக வரலாற்றில் குறிப்பிடப்படலாம்.
இங்கு உரையாற்றிய பலர் நாட்டில் தற்போது எரிவாயு, எரிபொருள் வரிசைகள் இல்லை, இரண்டு மணி நேரமே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என பேசினர். இதனால், நாடு வழமைக்கு திரும்பியுள்ளதாக அவர்கள் கூறினர்.
எனினும் உண்மையில் நெருக்கடியின் போர் நிறுத்தமே தற்போது ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் எமது ஏற்றுமதி வருமானம் ஆயிரத்து 100 மில்லியன் டொலர்களில் இருந்து ஆயிரத்து 200 மில்லியன் டொலர் வரை இருந்தது.
இறக்குமதிகள் குறைக்கப்பட்டுள்ளன

அதேபோல் எமது இறக்குமதி செலவு சுமார் ஆயிரத்து 900 மில்லியன் டொலர்களாக இருந்தது. மாதாந்தம் நாம் 600 மில்லியன் டொலர்களை கடனுக்காக செலுத்த வேண்டியது அவசியம்.
இந்த சமநிலையானது தற்போது எவ்வாறு எட்டப்பட்டுள்ளது?. ஆயிரத்து 900 மில்லியன் என்ற எமது இறக்குமதி செலவு ஆயிரத்து 6 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. 600 மில்லியன் டொலர் கடனை செலுத்துவது முற்றாக கைவிடப்பட்டுள்ளது.
இலங்கை சர்வதேச நிதி சந்தையில் கடனை செலுத்தாத பொருளாதாரம் சீர்குலைந்த நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிதி சந்தையில் எமக்கு கடனை பெற முடியாது.
எரிவாயுவை எடுத்துக்கொண்டால், அதற்கான கேள்வி 50 வீதமாக குறைந்துள்ளது. டீசலுக்கான கேள்வி 52 வீதமாக குறைந்துள்ளது. பெட்ரோலுக்கான கேள்வி 26 வீதமாக குறைந்துள்ளது.
போர் நிறுத்தம் சமூக போராட்டமாக வெடிக்கும்

மொத்தமாக எடுத்துக்கொண்டால், பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதிக்கு செலவாகிய பணம் 40 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மின்சாரத்திற்கான கேள்வியும் 20 வீதமாக குறைந்துள்ளது.
பொருளாதாரத்தின் எதிர்மறை வளர்ச்சியானது 10 வீதத்தை நெருங்கியுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. தொழில் இழப்புகள் ஏற்படுகின்றன. இதனால், தற்போது ஏற்பட்டிருப்பது போர் நிறுத்தம் என்பதை நாம் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த சுற்றில் பாரிய சமூக போராட்டமாக வெடிக்கும் எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.