இறம்பைக்குளம் அபிவிருத்தி உத்தியோகத்தரை இடமாற்றுமாறு கோரி மகஜர் கையளிப்பு
அரசாங்கத்தின் 3 மில்லியன் ரூபாய் பாதீட்டு விவகாரத்தால் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இறம்மைக்குளம் அபிவிருத்தி உத்தியோகத்தரை இடமாற்றுமாறு கோரி மூன்று கிராம மட்ட அமைப்புக்கள் கூட்டாக இணைந்து பிரதேச செயலாளர் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட அபிவிருத்தி குழு இணைப்பாளர் ஆகியோருக்கு மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது கிராம சேவகர் பிரிவான இறம்பைக்குளம் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமைபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அரசினால் அறிமுகம் செய்யப்பட்ட 3 மில்லியன் ரூபாய் பாதீட்டு திட்டத்தில் எமது மக்கள் கூட்டத்தில் தீர்மானிக்கபடாத தன்னிச்சையான பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை எமக்கு ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது.
மேற்படி நபரால் பரித்துரைக்கப்பட்ட பல விடயங்கள் மக்கள் பணத்தினை வீணாக்கும் செயற்பாடு மட்டும் அன்றி இதனை ஒருமுறை கேடாகவே நாம் பார்க்கின்றோம்.
ஆகவே குறித்த நபரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை நிராகரித்து மேற்படி கூட்டத்தினை மீண்டும் ஒழுங்கு செய்து சரியான முடிவினை எடுப்பது மட்டுமன்றி, மேற்படி உத்தியோகத்தர் தனது அலுவலகத்திற்கு வருவதோ, மக்கள் சந்திப்புக்களை முறையாக மேற்கொள்வதோ தனது கடமையை செய்வதில் ஆர்வம் இல்லாமை போன்ற காரணங்களினால் மேற்படி நபரை எமது கிராம சேவகர் பிரியில் இருந்து மாற்றி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில் சின்னப்புதுக்குளம் கிராம அபிவிருத்தி சங்கம், இறம்பைக்குளம் கிராம அபிவிருத்தி சங்கம், சகாயமாதாபுரம் கிராம அபிவிருத்தி சங்கம் என்பவற்றைச் சேர்ந்தவர்கள் கையொப்பம் இட்டு பிரதேச செயலாளர் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட அபிவிருத்தி குழு இணைப்பாளர் ஆகியோருக்கு கையளித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் குறித்த இறம்பைக்குளம் அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் கேட்ட போது,
சுற்று நிருபத்தில் உள்வாங்க முடியாத விடயங்களை இவர்கள் கோரியமையினால் அவற்றை 3 மில்லியன் ரூபாய் பாதீட்டு திட்டத்தில் உள்வாங்க முடியவில்லை.
இவ்விடயமே அவர்களுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளதே தவிர வேறு எவ்வித விடயங்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.



