எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்: முல்லைத்தீவில் தபால் அட்டை மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக “எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்" எனும் தொனிப்பொருளில் வட மாகாண ரீதியாக முப்படைகள் வசம் இருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்க கோரி தபால் அட்டை மூலம் ஜனாதிபதியை கோரும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த நடவடிக்கையானது சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முன்னால் நேற்று (07.03.2024) நடைபெற்றுள்ளது.
காணியை இழந்த மக்கள்
வட மாகாண ரீதியாக மக்களின் காணிகளை அரசாங்கம் மற்றும் முப்படையினர் கையகப்படுத்தி குறித்த காணிகளில் வணிக செயற்பாடுகள் மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் காணி உரிமையாளர்களான மக்கள் காணிகள் இன்றியும் வாடகை வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.
இதனடிப்படையில் மக்களின் காணிகளில் குடியிருக்கும் இராணுவத்தினர் காணிகளை
மக்களுக்காக விடுவித்து வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் கேப்பாப்புலவு, வட்டுவாகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்களை இணைத்து இவர்களூடாக ஜனாதிபதியின்
காரியாலயத்திற்கு ஐந்தாயிரம் தபால் அட்டைகளை அனுப்பி வைக்கும் முகமாக குறித்த
நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மேலும், காணியை இழந்த மக்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் தொடர்ந்து தபால் அட்டைகளை பூர்த்தி செய்த மக்கள் முல்லைத்தீவு அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று தபால் அட்டைகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









