காலனித்துவ காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் கைக்குண்டு மீட்பு
கந்தளாய் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள கழ்மலை பன்சலைக்கு அருகிலுள்ள பாறைக் குன்றுப் பகுதியில், காலனித்துவ காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் கைக் குண்டு ஒன்று நேற்று (28) கந்தளாய் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற கந்தளாய் பொலிஸார், குறித்த கைக்குண்டை பாதுகாப்பாக மீட்க, அப்பகுதியில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து
சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்வது தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டதுடன், சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து, விசேட அதிரடிப்படையின் (STF) வெடிகுண்டு அகற்றும் மற்றும் ஆய்வுப் பிரிவினரின் உதவியுடன் குறித்த கைக் குண்டு பரிசோதிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைக் குண்டு மீட்கப்பட்ட பாறைக் குன்றுப் பகுதியில் காலனித்துவ ஆட்சிக் காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் பழமையான கட்டிட இடிபாடுகள் காணப்படுகின்றன.
மேலும், கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் சிறிய விமான தரையிறக்குத் தளம் ஒன்று இயங்கியிருந்ததாக உள்ளூர் வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், மீட்கப்பட்ட கைக் குண்டு உண்மையில் காலனித்துவ காலத்தைச் சேர்ந்ததா, அதன் வகை மற்றும் செயல்பாட்டு நிலை என்ன என்பது தொடர்பான இறுதி உறுதிப்படுத்தல், விசேட தொழில்நுட்ப ஆய்வுகளின் பின்னரே அறிவிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam