அமெரிக்காவைத் திருப்திப்படுத்த அஞ்சுகின்றதா அநுர அரசாங்கம்..! ஈரான் விவகாரத்தில் ஹக்கீம் எழுப்பும் காரசாரக் கேள்விகள்
மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போர் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்கத் தயங்குகின்றது என்றும், பூசி மெழுகும் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய கிழக்குப் போரினால் நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து நேற்று (19.03.2026) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து முன்னெடுத்து வரும் தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களை மீறிய அத்துமீறிய செயல் என்றும் ஹக்கீம் குறிப்பிட்டார்.
தாக்குதல்
"ஈரான் மீது தாக்குதல் நடத்த எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை. அவர்களது ஆட்சிமுறை பிடிக்கவில்லை என்பதற்காகவே ஆன்மீகத் தலைவரைப் படுகொலை செய்துவிட்டுத் தாக்குதல் நடத்துகின்றனர். இப்போரில் உலக நாடுகள் பல ஈரானுக்கே ஆதரவாக உள்ளன. ஆனால், எமது அரசாங்கம் அமெரிக்காவைத் திருப்திப்படுத்த முனைவதால் ஒரு தெளிவான முடிவை எடுக்க அஞ்சுகின்றது" என்றும் ஹக்கீம் தெரிவித்தார்.
சர்வதேச கடல் எல்லையில் பாதிக்கப்பட்ட ஈரான் கப்பலுக்கு அனுமதி வழங்க இலங்கை அரசாங்கம் 11 மணிநேரம் தாமதித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச சமவாயங்களில் கையெழுத்திட்டுள்ள ஒரு நாடு என்ற வகையில் இது தவறான முன்னுதாரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வில் பெரும்பாலான வெளிநாட்டுத் தூதுவர்கள் கலந்துகொள்ளாமைக்கு, ஈரானுக்கு எதிரான போரில் அரசாங்கம் கொண்டுள்ள தெளிவற்ற வெளியுறவுக் கொள்கையே காரணம் என்றும் அவர் சாடினார்.
விஜித ஹேரத்தின் கருத்தை நிராகரித்த ஹக்கீம்
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் இலங்கைக்குப் பாதிப்பில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்த கருத்தை ஹக்கீம் நிராகரித்தார். இந்தியாவிடம் இருந்து எரிபொருள் பெற்றாலும், இந்தியாவுக்கே அந்த எரிபொருள் ஹோர்முஸ் வழியாகத்தான் வரவேண்டும் என்பதை அமைச்சர் புரிந்துகொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஹூதி படைகள் செங்கடலில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினால், இலங்கையின் பொருளாதாரப் பாதிப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது காட்டிய நடுநிலைமையை அநுர அரசாங்கம் தற்போது கடைப்பிடிக்கவில்லை என்று தெரிவித்த ஹக்கீம், பலஸ்தீன மக்கள் கொல்லப்படும்போதும், தற்போது ஈரான் தாக்கப்படும்போதும் அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்கத் தயங்குவது கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
விஜய் டிவியில் விரைவில் முடிவுக்கு வரப்போகும் சூப்பர் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா, ரசிகர்கள் ஷாக் Cineulagam
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam