நாடளாவிய ரீதியில் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்(Photos)
நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தமது ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
இதற்கமைய அனைத்து பள்ளிவாசல்களிலும் விஷேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருகோணமலை
திருகோணமலையில் இன்றையதினம் காலை 6.45 மணி முதல் 9 மணி வரை விஷேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளிவாசலில் பேஷ் இமாம் என்.நஸார்தீன் மௌலவி தொழுகை நடத்தியுள்ளார்.
மேலும், ஹஜ் பெருநாளின் மகிமை பற்றி குத்பா பிரசங்கமும் நிகழ்த்தியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உறவினர்களின் வீடுகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை மரணித்த உறவினர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக பிரார்த்தனையும் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன்
ஹட்டனில் வாழும் இஸ்லாமிய மக்கள் ஹஜ் பெருநாளினை கொண்டாடியுள்ளனர்.
ஹஜ் திருநாளினை முன்னிட்டு இன்று (10)ஹட்டன் ஜூம்மா பள்ளிவாசலில் விஷேட பெருநாள் தொழுகை மௌலவி சாஜகான் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது ஹட்டன் பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக பெருநாள் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முசாபா செய்து கொண்டுள்ளனர்.
தொழுகையின் போது நாட்டிக்கும் நாட்டு மக்கள் சாந்தி சமாதானம் நிலவி நாடு வளம் பெற வேண்டும் என தூவா பிராத்தனையும் இடம்பெற்றுள்ளது.
செய்தி: மலைவாஞ்சன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு - ஓட்டமாவடி மண்ணு ஸல்வா வளாகத்தில் இன்று(10) புனித ஹஜ்ஜு பெருநாள் தொழுகை திறந்த வெளியில் நடைபெற்றுள்ளது.
பெருநாள் தொழுகையையும் பெருநாள் கொத்பா பேருரையையும் அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஹாறூன் ஸஹ்வி நடாத்தியுள்ளார்.
அத்துடன் திறந்த வெளியிலான தொழுகையில் அதிகமான ஆண்களும் பெண்களும் ஈடுபட்டுள்ளனர்.
பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்து கொண்டுள்ளனர்.
செய்தி: நவோஜ்



