நீதிமன்ற கொலை தொடர்பான முக்கிய விடயங்கள்: சபையில் விளக்கிய பாதுகாப்பு அமைச்சர்
புதுக்கடை நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் மித்தெனிய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21.02.2025) உரையாற்றிய அமைச்சர் விஜேபால, துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பல்வேறு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாகும் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அண்மைய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.
மித்தெனியா துப்பாக்கிச் சூடு
இதனை தொடர்ந்து, இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட மித்தெனியா துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபர்களில் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு
அதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டில், சம்பவம் நடந்த 08 மணி நேரத்திற்குள் பிரதான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேக நபரைக் கைது செய்வதில் துரிதமாக செயல்பட்ட பொலிஸாரை பாராட்டுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சிகள் கூறுவது போல் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடந்த முதல் சம்பவம் இதுவல்ல என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், அரசாங்கம் இந்த விடயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுப்பதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.
அது மாத்திரமன்றி, தேசிய பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அமைச்சர் ஆனந்த விஜேபால வலியுறுத்தியுள்ளதுடன் இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |