நம்பகத்தன்மையில் வீழ்ச்சி! சர்வதேச “ரேடார்” திரையில் சிக்கிய இலங்கை
இலங்கைக்கு அமெரிக்கா தெரிவித்த செய்தி ஆழமாகப் பிரதிபலிக்க வேண்டும். அத்துடன் அது இலங்கையில் அர்த்தமுள்ள படிப்பினைக்கு காரணமாக இருக்கவேண்டும் என்று உலக தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
லண்டனை தளமாகக் கொண்ட, உலக தமிழர் பேரவை, இலங்கை பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இருப்பதாக தமது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
எதேச்சாதிகாரம் மற்றும் இராணுவமயமாக்கப்பட்ட ஆட்சி, தமிழ், முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ சமூகங்கள் மேலும் ஓரங்கட்டப்படுவது, பலவீனமான நிதி நெருக்கடி மற்றும் மக்களை சூழ்ந்துள்ள பொருளாதார சிக்கல்கள் என்பன நாட்டில் புதிய மோதல்களை உருவாக்குவதற்கான காரணங்களாக அமைந்துள்ளன என்றும் பேரவை அச்சம் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் சர்வதேச சமூகத்தின் நம்பகமான உறுப்பினர் என்ற நிலைப்பாட்டில் இலங்கையின் நம்பகத்தன்மை வீழ்ச்சியடைந்துள்ளது
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த டிசம்பர் 9-10ஆம் திகதிகளில் நடத்திய அரசாங்கம், குடியியல் சமூகம் மற்றும் தனியார் துறையின் தலைவர்களுக்கான மெய்நிகர் உச்சி மாநாட்டுக்கு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது கூட இந்த வீழ்ச்சிக்கான ஒரு உதாரணமாகும்.
2021ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதியன்று மனித உரிமைகள் தினத்தைக் குறிக்கும் வகையில், அமெரிக்க அரசாங்கம் இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது தடைகளை விதித்துள்ளது:
கொழும்பில் 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் கொலை வழக்கில் ஈடுபட்டதற்காக இலங்கை கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் எட்டு தமிழ் மக்களை கொலை செய்தமைக்காக தண்டனை பெற்றநிலையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள சுனில் ரட்நாயக்க ஆகியோருக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது அமொிக்கா, இலங்கைத் தலைமைக்கு தெரிவிக்கும் செய்தியாகவே நோக்கப்படுவதாக உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கை தற்போது சந்தேகத்திற்கு இடமின்றி, சர்வதேச 'ரேடார் 'திரையில் காட்சியளிப்பதாகவும் உலக தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
