கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்
பல கோரிக்கைகளை முன்வைத்து வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் உடலநலக் குறைவு விடுமுறையைப் பதிவு செய்து, அனைத்துக் கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு இலங்கை கிராம உத்தியோகத்தர் தேசிய சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த இரண்டு நாள் தொழிற்சங்க நடவடிக்கையின் போது தமது தொழில்சார் கோரிக்கைகளுக்கு அதிகாரிகளிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால், தொழிற்தொழில்சார் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டபிள்யூ. ஏ. பி. ஏ. விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர் சேவைக்கு பொருத்தமான மற்றும் சிக்களற்ற சேவைப் பிரமாணக் குறிப்பை பெற்றுக்கொள்ளுதல், எரிபொருள், அலுவலக வசதி, எழுதுபொருட்கள் மற்றும் நாளாந்தக் கொடுப்பனவு தொடர்பாக 'கம்மன்பில குழு' வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் (22.07.2026 அன்று துறைசார் பிரதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தின் படி) மற்றும் 2009/10 ஆம் ஆண்டு அணியினருக்கு நியமனக் காலம் முதல் இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு அரசியல் அதிகாரிகளிடமும் நிர்வாகத் தலைவர்களிடமும் பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்த போதிலும், இதுவரை எவ்விதத் தீர்வும் வழங்கப்படாததால், ஒருமனதாக இத்தீர்மானத்தை எட்டியதாக பொதுச்செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.