திருகோணமலையில் வாள்வெட்டு தாக்குதல்! 6 பேர் படுகாயம்
ஈச்சிலம்பற்று -இலங்கைத்துறை பகுதியில் குழு ஒன்றினால் பேருந்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஆறு பேர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (27) காலை சுமார் 7.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மூதூர் நீதிமன்றில் உள்ள வழக்கு ஒன்றிற்காக இலங்கைத்துறையில் இருந்து மூதூர் நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றில் மூதூர் நோக்கி பயணித்தபோதே குறித்த வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல்
இதன்போது 15 க்கும் மேற்பட்டோர் முகங்களை மறைத்த நிலையில் இலங்கைத்துறை சந்தியில் வைத்து பேரூந்தை மறித்து பேருந்தின் சாவியை கையில் எடுத்துக் கொண்டு வாள் மற்றும் கோடரி போன்ற ஆயுதங்களினால் குறித்த வழக்குடன் தொடர்புபட்ட குறித்த நபர்களின்மீது தாக்குதல் மேற்கொண்டனர்.

இதன்போது,பேருந்து நடத்துனரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
குறித்த வெட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 6 பேரும் மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் ஒருவர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
2024.04.03 அன்று இடம்பெற்ற ராசா என்பவரின் கொலை தொடர்பான வழக்கின் தவணைக்காக இன்றையதினம் (27) அதனுடன் தொடர்புடைய நபர்கள் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் வழக்குடன் தொடர்புடைய கந்தையா கமலதாசன் (வயது 45), கமலதாசன் கதுர்ஷன் (வயது 24), கமலதாசன் கஜேந்திரன் (வயது 27), இராசு கிசாந்த் (வயது 22), முகமட் பாயிஸ் விதுர்ஷன் (வயது 19) ஆகியோரும் பேரூந்தில் உதவியாளராக கடமையாற்றி வந்த கே ஜெயந்தன் (வயது 23) என்பவருமே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல்-யூசுப்