முல்லைத்தீவில் பெரும்போக நெல் அறுவடையில் பாரிய வீழ்ச்சி! விவசாயிகள் அவதி
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தற்போது பெரும்போக நெல் அறுவடையில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இம்முறை பெரும்போக நெல் விளைச்சல் பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில்,
பயிர்ச்செய்கைகளுக்குரிய இரசாயன உரமின்மை மற்றும், கிருமி நாசினி விலையேற்றம் காரணமாக அவற்றைத் தாம் வாங்கி பயன்படுத்த முடியாத நிலை, போன்ற காரணங்களினாலேயே இம்முறை தமது பெரும்போக நெற்செய்கையின் விளைச்சலில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதேவேளை தற்போது எரிபொருட்களின் விலை அதிகரிப்பினால் அறுவடை இயந்திரக்கூலி முன்பை விடத் தற்போது அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஏக்கர் ஒன்றிற்குத் தாம் ஒன்பதாயிரம் தொடக்கம், பத்தாயிரம் வரையில் அறுவடை இயந்திரக்கூலியாக வழங்க வேண்டியுள்ளது.
இம்முறை நெற்செய்கை விளைச்சல் பாரிய அளவு வீழ்ச்சியடைந்துள்ள சூழலில், அறுவடைக்கான கூலி முன்பைவிட அதிகரித்திருப்பது தம்மை மேலும் சிக்கலுக்குள்ளாக்குவதாக அமைந்துள்ளது.
இதனைவிட நெல்லினை சந்தைப்படுத்துவதிலும் பல்வேறு ஈடுபாடுகளுக்குத் தாம் முகங்கொடுத்துள்ளோம்.
குறிப்பாக உலர்ந்த சிவத்தப்பச்சை(கோறா) நெல்லினை வியாபாரிகள் 6000 ரூபாய்க்கு தம்மிடமிருந்து பெறுவதாகவும், உலராத நெல்லினை 4500 ரூபாய்க்குப் பெறுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே தாம் கட்டாயமாக நெல்லினை உலரவைத்து சந்தைப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது முல்லைத்தீவில் மும்முரமாக நெல் அறுவடை இடம்பெறுவதால், விவசாயிகள் அனைவரும் நெல் உலரவிடும் தளங்களைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது என்றனர்.
ஆகவே முல்லைத்தீவு விவசாயிகள் பலத்த இன்னல்களுக்கு மத்தியில், பிரதான வீதிகளை நெல் உலரவிடும் தளங்களாகப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri