தேர்தல் நெருக்கடிக்குள் வீதிக்கு இறங்கும் வேலையில்லா பட்டதாரிகள்
நாட்டின் பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம் இருக்க இலங்கையில் வேலையில்லா பட்டதாரிகளின் நிலைமை ஒரு பக்கம் அரசாங்கத்துக்கு சவாலாக உள்ள நிலையில் வீதிப் போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியும் இலங்கையில் தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவுள்ளனர்.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் இருந்து தங்களது பட்டப்படிப்புக்களை முடித்து விட்டு அரச துறையில் தொழில்களை எதிர்பார்த்து அழுத்தங்களை கொடுத்தும் பல்வேறுபட்ட வீதி போராட்டங்கள், தொடர் போராட்டங்கள் ஊடாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
தற்போதைய அரசாங்கம் வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனங்கள் வழங்குவது தொடர்பில் பெருமளவில் கரிசணை காட்டவில்லை என்பது புலனாகிறது.
தொடர் போராட்டங்கள்
அரச பல்கலைக்கழகங்களில் பட்டங்களை முடித்தும் வீட்டில் பலர் தனியார் துறையை விரும்பாத நிலையில் முடங்கிக் கிடக்கின்றனர். அதிலும் ஆண்களை விட பெண்களின் தொழிலற்ற வீதம் அதிகரித்து காணப்படுகிறது.
அண்மையில் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் ஊடாக மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால் 19 ஆவது நாட்களையும் கடந்த நிலையில் தொடர்போராட்டங்களை முன்னெடுத்தனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒரு நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்புக்கு விஜயம் செய்த வேலை போராட்டக்காரர்கள் வீதி ஊர்வலமாக சென்று மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.
இது தவிர திருகோணமலை மாவட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகள் கிண்ணியாவில் ஊடக சந்திப்பு மூலம் அரசாங்கத்திடம் தங்களுக்கு நியமனங்களை வழங்க வேண்டும் எனவும் அழுத்தங்களை கொடுத்தனர்.
அரசியல்வாதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக கோரிக்கை விடுத்த போதிலும் சரியான முடிவுகள் கிடைக்கவில்லை. கிழக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் இப்பட்டதாரிகள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
அரச நியமனங்கள்
அதேவேளை, கோட்டாபய அரசாங்கம் ஆட்சியின் போது 2019இல் அரச நியமனங்களையும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களையும் வழங்கியிருந்த போதிலும் அதன் பின்னர் அரச துறையில் தற்போதைய அரசாங்கம் வேலையில்லா பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்கவில்லை.
இதனால் கடந்த ஐந்து வருடங்களில் சுமான் 50ஆயிரம் பட்டதாரிகள் நாடு தழுவிய ரீதியில் அரச பல்கலைக்கழகங்களில், அரச துறை சார் நிறுவனங்களில் பட்டம் முடித்தவர்கள் தொழில் இன்றி உள்ளார்கள்.
தொழில்வாண்மையான பட்டதாரிகள் வைத்தியத் துறை, பொறியியல் துறையில் பல நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும் கலைத்துறை, சமூக, விஞ்ஞான பட்டதாரிகள் அரச துறையில் வேலைவாய்ப்பு பெறுவது கடினம்.
ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சைகளுக்கு கலைதுறையில் குறிப்பிட்ட சிலரே தெரிவாகின்ற போதிலும் மிகுதி பட்டதாரிகள் தொழில் இன்றி காணப்படுவதுடன் அரச துறை நியமனங்களை நம்பி 45 வயதை தாண்டிய நிலையில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமல்ல ஏனைய தென்னிலங்கையிலும் உள்ளார்கள்.
அரச சேவை மக்களுக்கு வினைத்திறனுடன் வழங்க வேண்டும் என்ற அரச கொள்கை காணப்பட்டாலும் பல்கலைக்கழக பட்டங்கள் முடித்து உள்வாரி வெளிவாரியான பட்டங்களை கற்று திறம்பட வெளியேறிய போதிலும் நியமனங்களை பெறுவது தற்போதைய சூழ்நிலைமில் எட்டாக் கனியாகவே காணப்படுகிறது.
அரசாங்கம் தேர்தலை இலக்காக கொண்டு பல திட்டங்களை செய்து வாக்குகளுக்காக திசை திருப்ப பல உத்திகளை கையாளுகின்ற போதிலும் வேலையில்லா பட்டதாரிகளை கவனத்திற் கொள்ளவில்லை. இதனால் சமூக பொருளாதார பிரச்சினை மிக மோசமாக பாரிய பின்னடைவுக்குள் தள்ளிவிடுகிறது.
பொருளாதார நெருக்கடி
தற்போதைய அரசாங்கத்தில் பொருளாதார நெருக்கடியில் அரசாங்க ஊழியர்களும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கிறார்கள். பலருக்கு மாதாந்த சம்பளம் பெற்றாலும் அதற்கு மேல் செலவு, கடன் தொகை என உளரீதியாக சிந்திக்க தூண்டுவதுடன் சமூக பொருளாதார தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது.
திருகோணமலை மாவட்ட பட்டதாரிகள் அண்மையில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்ததுடன் வீதிப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர். இதன்போது, எங்களது வேலையில்லா பிரச்சினையை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் செவிமடுக்க வேண்டும்" இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசுவதற்காக ஊர் பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாங்கள் நாடி உள்ளோம் என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இந்த அரசாங்கம் மிக விரைவில் எங்களது வேலையில் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை சரியான முறையில் தீர்க்காவிடின் வீதிக்கு இறங்கிப் போராடுவோம்.
900இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எந்தவிதமான வேலையும் இல்லாமல் எங்களது மாவட்டத்தில் வீதிகளிலும் ஏனைய இடங்களிலும் இருக்கின்றார்கள். ”வயது வந்து 35 கழிந்து விட்டது. எங்களுக்கு சரியான வேலையை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
35 வயதுக்கு பிறகு நிறுவனங்களிலும் உள்ளீர்ப்பு செய்வதற்கு மிகவும் கடினமாகும். உள்வாரி - வெளிவாரி வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் என எவ்வித பாகுபாடும் இன்றி எங்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்று தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
பெண்ணுரிமை. பெண் சமூகம், பெண்களுக்கான பாதுகாப்பு சகலதையும் வழங்கக்கூடிய ஒரு நாடு அப்படியாக இருந்தும் எங்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற கால அவகாசம் மிகவும் அதிகமாக இருக்கின்றது
உரிய வயதில் உரிய வேலை வாய்ப்புக்களை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனவும் அரசாங்கத்திடம் மேலும் கோரிக்கைகளை முன்வைத்ததுடன் இதில் பெரும்பாலான வேலையில்லா பட்டதாரிகளும் கலந்து கொண்டனர்.
கல்விக் கொள்கையில் மாற்றங்காண வேண்டும். அரசின் புதிய கொள்கை திட்டங்கள் ஊடாக வீதிக்கு இறங்கி போராட முடியாத கொள்கைகளாக இருக்க வேண்டும் அப்போது தான் வேலையில்லா பட்டதாரிகளுக்கான சுபீட்சமான எதிர்காலம் கிட்டும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |