புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு: பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னர் கசிந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட மூன்று வினாக்கள் தவிர்ந்த மேலும் வினாக்கள் கசிந்திருக்குமாயின் அவை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அது தொடர்பான முறைப்பாடுகள் கோரப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சையில் உள்ளடக்கப்பட்ட வினாக்களில் மூன்று வினாக்கள் வெளியில் கசிந்த விவகாரம் தற்போது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கமைய, அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தங்களது முறைப்பாட்டை முன்வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வினாக்களுக்குமான புள்ளிகள்
குறித்த முறைப்பாடுகளை நாளை மறுதினத்திற்குள் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ கோரியுள்ளார்.
இந்த நிலையில், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு இடர் ஏற்படுத்தாத வகையில் குறித்த மூன்று வினாக்களுக்குமான புள்ளிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானம் மேற்கொண்டிருந்தது.
எனினும், குறித்த விவகாரம் தொடர்பில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பெற்றோர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து மதிப்பீட்டு நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |