நாடாளுமன்ற உறுப்பினர்களில் 146 பேருக்கு கோவிட் தடுப்பூசி
இலங்கையின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 146 பேருக்கு மட்டுமே ஆகஸ்ட் 12 நிலவரப்படி கோவிட் தடுப்பூசி, செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, 2021 பெப்ரவரி 16 ஆம் திகதி ஆரம்பித்தது.
எனினும், இதுவரை 146 உறுப்பினர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 122 பேர் நாரஹேன்பிட்ட, இராணுவ மருத்துவமனையில் இந்தியாவின் எ ஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை இரண்டு அளவுகளில் பெற்றுள்ளனர்.
24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V மருந்தை நாடாளுமன்ற சுகாதார மையத்தில் வைத்து செலுத்திக்கொண்டனர்.
எனினும் இதுவரை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத உறுப்பினர்களின் விபரங்கள் மற்றும் காரணம், தம்மிடம் இல்லை என்று தகவல் அதிகாரியும் நாடாளுமன்ற உதவி பொதுச்செயலாளருமான டிக்கிரி கே.ஜெயதிலக கூறியுள்ளார்.
ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் மொடர்னா, பைசர், சிஹோர்பார்ம் மற்றும் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளைப் பெற்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் நாடாளுமன்றத்தில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 14 நாட்களில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோவிட் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, ஹம்பாந்தோட்டை மாவட்ட, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் - திலீப் வெதராச்சி, மாத்தளை மாவட்ட பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன திசாநாயக்க மற்றும் பதுளை மாவட்ட பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்- ஜனக திஸ்ஸகுட்டி ஆராச்சி ஆகியோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.