மாகாண சபைத் தேர்தலை பிற்போடவே செயற்குழுவை பயன்படுத்தும் அநுர அரசு - எழும் குற்றச்சாட்டு
மாகாண சபைத் தேர்தலை எந்த வழியில் மேலும் பிற்போடலாம் என்பதற்காகவே அநுர அரசு நாடாளுமன்ற விசேட செயற்குழுவைப் பயன்படுத்தி வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் கால அவகாசம் நீடிக்கப்பட்டமை மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்தக் குழு கூட்டத்தைப் புறக்கணித்தமை குறித்து ஊடகங்கள் வினவியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பழைய முறைமையின் கீழ்
அவர் மேலும் கூறுகையில், "மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்று ஆராய்ந்து விதப்புரைகளையும் யோசனைகளையும் முன்வைப்பதற்காக இந்த நாடாளுமன்ற விசேட குழு கடந்த 8 மாத காலமாகக் கூடியது.

மாகாண சபைத் தேர்தலைப் பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்று குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவும், சட்டமா அதிபர் திணைக்களமும் தெளிவாக அறிக்கை சமர்ப்பித்துள்ளன.
பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதாயின் அதற்குரிய சட்ட திருத்தங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்தப் பரிந்துரைகள் குறித்துக் கவனம் செலுத்தினால் காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு உடனடியாகத் தீர்வு காணலாம்.
காலத்தை வீணடிக்கும் விசேட செயற்குழு
ஆனால், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த பரிந்துரைகள் எதைக் குறித்தும் அரசு எந்தவொரு கவனமும் செலுத்தவில்லை.

தேர்தலை எப்படியாவது பிற்போடுவதற்கான யோசனைகளுக்கு மாத்திரமே அரசு முன்னுரிமையளித்துச் செயற்பட்டது.
இதற்கமைய, இந்தக் குழுவின் செயற்பாட்டுக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் முறையற்ற செயலாகும்.
தேர்தலை நடத்தும் உண்மையான நோக்கம் அரசிடம் சிறிதும் கிடையாது. குழு அறிக்கை சமர்ப்பித்தவுடன் தேர்தலை நடத்தத் தயார் என்று கூறிக்கொண்டு அரசு திட்டமிட்டுக் காலத்தை இழுத்தடித்து வருகின்றது.
எனவே, இவ்வாறு காலத்தை வீணடிக்கும் இந்த விசேட செயற்குழுவில் தொடர்ந்து பங்குபற்றுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் இனி அந்தக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டோம் என்று ஒருமித்தமாகத் தீர்மானித்துள்ளோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.