ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரைவில் கவிழும்: இராதாகிருஷ்ணன்
மக்கள் எழுச்சியால் சர்வாதிகாரிகளின் சாம்ராஜ்யங்கள் கூட சரிந்துள்ளன. கால சக்கரம் என்பது அநீதி இழைப்பவர்களுக்குக் கருணை காட்டாது. தற்போது இலங்கை மக்களும் கொதித்தெழுந்துள்ளனர்.
எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரைவில் கவிழும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் சூளுரைத்தார்.
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் தலவாக்கலையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
" மக்கள் சக்திக்கு முன் அரசியல் சக்தியால் துணிந்து நிற்க முடியாது. நிச்சயம் மண்டியிட்டாக வேண்டும். இதுவே வரலாறு எமக்கு கற்றுத் தந்துள்ள பாடம்.
சர்வாதிகாரிகளான சதாம் உசைன், முகாகே போன்றவர்களின் சாம்ராஜ்யங்கள்கூட மக்கள் எழுச்சியால் சரிந்தன. அதேபோல அநீதிகள் தலைவிரித்தாடும்போது கால சக்கரமும் கைகட்டி வேடிக்கை பார்க்காது, அது தனக்கே உரிய பாணியில் வேலையைக் காட்டிவிடும்.
அந்தவகையில் ராஜபக்சக்களை தலையில் தூக்கி வைத்து ஆனந்த கூத்தாடியவர்கள்கூட , ராஜபக்சக்கள் வீடு செல்ல வேண்டும் என வலியுறுத்திப் பொங்கியெழுந்து போராடுகின்றனர்.
எமது மக்களும் வீதிக்கு இறங்கிவிட்டனர். இதனை நாம் நாட்டை
மீட்பதற்கான சுதந்திரப் போராட்டமாகவே கருதுகின்றோம். எனவே, இன, மத, பேதமின்றி
அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து தற்போது போலவே தொடர்ந்தும் போராட வேண்டும்." இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.