அரச ஊழியர்கள் இன்னும் திருடுகிறார்கள் –கே. டி. லால்காந்த
நாட்டில் தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை என்றாலும், அரச ஊழியர்கள் இன்னும் திருடிக்கொண்டிருக்கிறார்கள் என விவசாய, காணி, நீர்ப்பாசன மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே. டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் புதிய ஊழியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரபுக்க்கள் அல்லாத சாதாரண மக்களின் ஆட்சியாக நாம் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற உறுதியில் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் இன்னும் திருட்டு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பட்டிகளை இருக்கிக் கொள்ளுமாறு கோரியிருந்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால் 2048 ஆம் ஆண்டு வரை காத்திருக்குமாறு அவர் கூறினார். ஆனால், நாம் இப்போது அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின் பணிகளையும் ஆரம்பித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறோம். இந்த யுத்தம் வந்த நேரத்தில் கூட சம்பளத்தைக் குறைக்கவோ அல்லது விவசாயிகளின் மானியங்களை நிறுத்தவோ நாம் எதையும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
அனைத்தையும் சிறப்பாக முகாமைத்துவம் செய்து கொண்டு செல்கிறோம். இப்போது நாட்டில் இருப்பது பணப் பற்றாக்குறை பிரச்சினை அல்ல என தெரிவித்துள்ளார்.
ரூபா 100 ஒதுக்கப்பட்டால், அதில் ரூபா 60க்குத்தான் வேலை நடக்கிறது. அரச சேவையில் இன்னும் திருட்டு நடக்கிறது. அரசியலில் இல்லை. ஆனால் மக்கள் இன்னமும் எங்களைத்தான் திட்டுகிறார்கள். 'என்ன, நீங்கள் இன்னும் இதை மாற்றவில்லையே' என்று எங்களைப் பார்த்து கேட்கிறார்கள் என அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.