டிட்வாவைப் போன்றே 22ம் திருத்தச் சட்டமும் பேரழிவாகும்
'டிட்வா' சூறாவளியைப் போலவே ஜனநாயகத்தை முடக்குவதும் ஒரு கொடூரமான பேரழிவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
22ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசாங்கம் ஜனநாயகத்திற்கு மரண அடியைக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் நோக்கில் வத்தளையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த முயற்சி முறியடிக்கப்படாவிட்டால், சுதந்திரமாக அரசியல் செய்யவோ அல்லது கருத்து சுதந்திரத்தைப் பயன்படுத்தவோ முடியாது போய்விடும் என எச்சரித்துள்ளார்.
தனிநபர் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்; இதன் மூலமே நாட்டின் 220 இலட்சம் மக்களின் அரசியல் மற்றும் சமூக சுதந்திரம் உறுதி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார். அதிகாரச் சமநிலை அவசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, எல் நினோ மற்றும் லானினா நிலவரங்கள் காரணமாக இலங்கைக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என காலநிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வறட்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு உள்ளிட்ட வானிலைப் பேரழிவுகள் தொடர்பில் கடுமையான கவனம் செலுத்தப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.