அரசாங்கத்தில் இருப்பவர்களே பெசிலுடன் அதிகம் பேசுகின்றார்கள் – நாமல்
அரசாங்கத்தில் இருப்பவர்களே தமது சிறிய தந்தையான பெசில் ராஜபக்சவுடன் அதிகம் பேசுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல்வேறு சட்ட மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ள போதிலும், முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச தொடர்ந்து அமெரிக்காவில் தங்கியிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
பெசில் ராஜபக்ச சட்டத்திலிருந்து தப்பிக்க முயல்கிறார் என்ற குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவரும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்த்து வருவதாகத் தான் நம்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் உள்ளவர்கள் எனது சிறிய தந்தையுடன் என்னை விட அடிக்கடி பேசுகிறார்கள் எனவும் அவர்களின் அறிவுரையின் பேரில் தான் அவர் வெளிநாட்டில் தங்கியிருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை அவர்களிடம் அல்லது எனது சிறிய தந்தையிடம் கேட்க வேண்டும். எவ்வாறாயினும், அவர் நீதிமன்றத் தகைமைகளின்படி சட்ட ரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு வருகிறார் என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
பெசில் ராஜபக்ஷ தனது சட்டத்தரணிகள் ஊடாக இலங்கை நீதிமன்றங்களில் தொடர்ந்து முன்னிலையாகி வருவதாகவும், அதற்கான சட்ட நடைமுறைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் வெளிநாடுகளில் தங்கியிருந்து நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து வருவதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், முறையான வழிகள் மற்றும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே இந்த பிரதிநிதித்துவங்கள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மீதான விசாரணைகளுக்கு மட்டும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
நாட்டின் பொருளாதார மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, இவ்வாறான விசாரணைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் அரசாங்கம் அரசியல் லாபம் பெற முயற்சிப்பதாக நாமல் ராஜபக்ச மேலும் சாடியுள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri