வவுனியாவில் கோவிட் தொற்றால் ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு
வவுனியாவில் கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் மரணமடைந்துள்ள நிலையில், ஒரே நாளில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கல்குண்ணாமடு பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண்ணும், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 60 வயது ஆணும் கோவிட் தொற்று காரணமாக மரமணமடைந்துள்ளனர்.
இது தவிர கற்குளம், கோவில்குளம், உக்குளாங்குளம், கரப்பங்காடு, தோணிக்கல், கனகராயன்குளம், வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 45, 71, 71, 53, 62, 60, 76 ஆகிய வயதுகளையுடைய 7 பேர் மரணமடைந்திருந்தனர்.
வவுனியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 9 பேர் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளனர். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களது உடலை தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை,வவுனியாவில் மேலும் 152 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று இரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில், 152 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



