வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசாங்க மருத்துவர்கள் சங்கம்
அரசாங்க மருத்துவர்கள் சங்கம் எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம் வேலைநிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மருத்துவர்களின் பணியிடமாற்றத்தின்போது சுகாதார அமைச்சின் அதிகாரிகள் வழங்கியிருந்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியே குறித்த வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்த இடமாற்றம்
இதுதொடர்பாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசாங்க மருத்துவர்களுக்கான வருடாந்த இடமாற்றங்களின்போது முன்பிருந்த வெளிப்படைத்தன்மை இப்போது மாற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக கஷ்டப் பிரதேசங்களுக்கான இடமாற்றங்கள், வருடாந்த இடமாற்றங்கள் என்பன தான்தோன்றித்தனமாக மேற்கொள்ளப்படுகின்றது.
இடமாற்றங்களின் போது கட்டாயமாக நிரப்ப வேண்டிய கஷ்டப் பிரதேசங்களுக்கான 134 பணி இடங்கள் சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் தற்போது ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
134 மருத்துவமனைகள்
அதன் காரணமாக கிராமப்புறங்களில் இருக்கும் 134 மருத்துவமனைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. அதே போன்று வேறு வெற்றிடங்கள் 78ம் திருட்டுத்தனமாக நீக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாற்றாகவே இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுகின்றது.
அதனைக் கண்டிக்கும் வகையில் எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




