கிழக்கில் தொடரும் அரச வைத்தியர்களின் வேலைநிறுத்தம் : நோயாளர்கள் பாதிப்பு
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீதான நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (14) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிதி மற்றும் நிர்வாக ரீதியிலான மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்கிவிட்டு, புதிய பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல்
நேற்று (13) ஆரம்பமான இந்தப் போராட்டமானது இன்று மாகாணம் தழுவிய ரீதியில் வலுப்பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா தள வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் நேற்று முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக இன்று காலை வைத்தியசாலைக்கு வருகை தந்த வெளிநோயாளர் பிரிவு (OPD) நோயாளர்கள் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.
இருந்தபோதிலும், அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய வைத்தியப் பிரிவுகள் வழமை போன்று இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு போதனா வைத்தியசாலை, 2 பொது வைத்தியசாலைகள், 17 ஆதார வைத்தியசாலைகள் , 52 பிரதேச வைத்தியசாலைகள், 113 ஆரம்ப சுகாதார மத்திய நிலையங்கள் ஆகியவற்றில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



