வடமாகாணத்தில் எரியூட்ட முடியாமல் தேங்கி கிடக்கும் கோவிட் சடலங்கள்
வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை எரியூட்டும் ஒரேயொரு எரிவாயு மயானமாக காணப்பட்ட வவுனியா பூந்தோட்டம் மயானம் பழுதடைந்துள்ளமையினால் சடலங்கள் எரியூட்டப்படாமல் தேங்கும் நிலை காணப்படுவதாக வவுனியா நாகரசபை தலைவர் தேசபந்து இ. கௌதமன் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள எரிவாயு மயானம் பழுதடைந்துள்ளமை தொடர்பில் அவரிடம் கேட்டபோது இவ்வாறு தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வட மாகாணத்தை பொறுத்தவரையில் கொரோனா மரணங்கள் அதிகரித்த நிலையில் உள்ளது. இந்நிலையில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் மாத்திரமே எரிவாயு மயானங்கள் இயங்கி வருகின்றது.
இந்நிலையில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்கள் வவுனியா மயானத்திலேயே எரியூட்டப்பட்டுகின்றது.
தற்போதைய நிலையில் அதிகளவான மரணங்களால் எமது மயானம் 24 மணித்தியாலங்களும் இயங்கும் மயானமாக செயற்பட்டு வருகின்றது. இதனால் நாம் பாரிய சவால்களையும் சிரமங்களையும் எதிர்கொள்கின்றோம்.
எனினும் எமது மக்களுக்கான சேவையை செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் உள்ளது. எனினும் அதிகளவான சடலங்களால் எமது மயானத்தின் தன்மை மற்றும் வினைத்திறன் குறைந்து செல்கின்றது.
நேற்று மாத்திரம் 11 சடலங்களை எரியூட்டியிருந்தோம். காலை 8 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 4 மணிவரையும் சடலங்கள் எரிக்கப்பட்டது. இதற்கும் மேலதிகமாக நேரப்பற்றாக்குறையினால் வவுனியா வைத்தியசாலையில் இன்னும் சடலங்கள் எரியூட்டப்படாமல் உள்ளது.
இந்த மயானம் இன்று காலை செயலிழந்துள்ளது. எனினும் இதனை மீள இயக்குவதற்கான முயற்சியை எடுத்து வருகின்றோம்.
அதனை பழுதுபார்க்க கூடியவர்கள் எவரும் வவுனியாவில் இன்மையால் கொழும்பில் இருந்தே வரவேண்டியுள்ளது. ஒருநாள் எமது மயானம் இயங்காது விடும் பட்சத்தில் சடலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகின்றது.
எனவே அரசாங்கம் இவ்வாறான அனர்த்த நிலைமையில் தங்களால் செய்யக்கூடிய உதவிகளை உடன் செய்யுமாறு வேண்டுகின்றோம் என தெரிவித்தார்.





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
